அ.தி.மு.க. அரசு ஆட்சியை மோடியிடம் அடகு வைத்து விட்டது வேலூரில் டி.டி.வி.தினகரன் பேச்சு
அ.தி.மு.க. அரசு ஆட்சியை மோடியிடம் அடகு வைத்து விட்டது என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார்.
வேலூர்,
வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் பாண்டுரங்கனை ஆதரித்து கழகத்தின் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று வேலூர் மண்டி தெருவில் திறந்தவெளி ஜீப்பில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மோடி ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது. அதோடு தமிழகத்தை வஞ்சிக்கும் துரோகிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர 18 சட்டமன்ற இடைத்தேர்தலும் வந்துள்ளது. இது ஒரு மினி சட்டமன்ற தேர்தல். ஏனென்றால் இந்த 18 தொகுதிகளிலும் வெல்ல முடியவில்லை என்றால் மோடி என்ன?, அவர்களுக்கெல்லாம் டாடி வந்தால் கூட இவர்களை காப்பாற்ற முடியாது. இவர்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தான் ஆர்.கே.நகர் மக்கள் என்னை வெற்றி பெற வைத்தார்கள்.
துரோகிகளுடன் இணைந்து தற்போது இரட்டை இலையை தூக்கி கொண்டு வருகிறார்கள். இரட்டை இலைக்கு பின்னால் மோடி இருக்கிறார் என்று யாரும் மறந்து விடக்கூடாது. இந்த அமைச்சர்களுக்கு பின்னாலும் மோடி தான் இருக்கிறார். ஜெயலலிதாவின் கட்சி இது. ஆனால் இந்த படுபாவிகள் ஆட்சியையே மோடியிடம் அடகு வைத்து விட்டார்கள். ஜெயலலிதா கட்சி தொடங்கியதில் இருந்து கடைசி காலம் வரை அனுமதிக்கபடாதவர்கள் இன்று இரட்டை இலையை தூக்கிக் கொண்டு வந்து நம்மிடம் வாக்கு கேட்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் முடிவு கட்ட வேண்டும்.
மற்றொரு வேட்பாளரை அவரது தந்தை தத்து கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள். அவர் யார் என்று உங்களுக்கு தெரியும். ஆட்சியில் இல்லாத போதே பிரியாணி கடைகள், பியூட்டி பார்லர், டீ கடைகள் அடித்து நொறுக்குகிறார்கள். கடந்த 7 ஆண்டுகளாக மக்கள் இவர்களை ஆட்சி கட்டிலில் அனுமதிக்கவில்லை. தற்போது அவர்கள் ராகுலுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். ஒருவேளை நீங்கள் அவர்களுக்கு வாக்களித்தீர்கள் என்றால் அடுத்த நிமிடமே அவர்கள் மோடியின் பக்கம் சென்று விடுவார்கள்.
ஏனென்றால் அவர்களின் வரலாறு அப்படி. கட்சி மாறுபவர்கள் அவர்கள். ஆட்சி அதிகாரத்துக்காக என்ன வேண்டும் என்றாலும் கூறுவார்கள். தமிழை வைத்து பிழைப்பு நடத்துவார்கள். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது வாய் மூடி நின்றவர்கள் அவர்கள்.
வேலூர் மக்கள் அரசியல் அறிவு கொண்டவர்கள். தேசிய கட்சிகளால் தமிழகத்துக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது. பாலாறு, காவிரி, மீத்தேன், நீட் போன்ற பல்வேறு பிரச்சினைகளை தமிழகத்துக்குள் வர அவர்கள் கதவை திறந்து விடுவார்கள்.
தத்து கொடுத்து விட்டார்கள் என நினைத்து நீங்கள் ஏமாந்து வாக்களித்தால் உங்களது சொத்துகள் அனைத்தும் பறிக்கப்படும். அவர்களுக்கு அதிகாரம் கிடைத்தால் நாடு சுருட்டப்படும். தமிழகத்தை விற்று விடுவார்கள். தமிழகத்தில் மக்கள் ஆட்சி மலர எங்களுக்கு பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். சின்னம் கிடைப்பதற்காக நாங்கள் துரோகிகளிடம் போராடி நீதிமன்றம் சென்று சின்னம் பெற்றுள்ளோம். கூட்டணி கட்சியினரும் நம்முடைய வெற்றி சின்னமான பரிசு பெட்டகம் சின்னத்தில் தான் போட்டியிடுகிறார்கள். நம்மிடம் பெரும்பான்மை, சிறுபான்மை என்கிற பிரிவினை கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் என்.ஜி.பார்த்திபனை ஆதரித்து டி.டி.வி.தினகரன் பேசினார்.
Related Tags :
Next Story