மதுரையில் பத்திரிகை அலுவலகம் எரிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை: கோர்ட்டில் சரண் அடைந்த 5 பேர் சிறையில் அடைப்பு
மதுரையில் பத்திரிகை அலுவலக எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 5 பேர் மதுரை மாவட்ட கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுரை,
கடந்த 2007–ம் ஆண்டில் மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு எரிக்கப்பட்டது. இதில் அந்த அலுவலக ஊழியர்கள் கோபிநாத், வினோத், காவலாளி முத்துராமலிங்கம் ஆகிய 3 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து மதுரை ஒத்தக்கடை போலீசார் வழக்குபதிவு செய்து, அட்டாக்பாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் 16 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தின்போது தனது பணியை செய்ய தவறியதாக அப்போதைய ஊமச்சிகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாராஜம் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டு, அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்ததை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, மதுரை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கில் அட்டாக்பாண்டி, ரூபன், ஆரோக்கியபிரபு, சுதாகர், மாலிக்பாட்சா உள்பட 9 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து கடந்த 21–ந்தேதி மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. போலீஸ் அதிகாரி ராஜாராமுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டவர்களில் அட்டாக் பாண்டி மட்டும் பொட்டுசுரேஷ் கொலை வழக்கில் கைதாகி, பாளையங்கோட்டை சிறையில் உள்ளார்.
இதையடுத்து ஆயுள்தண்டனை பெற்ற ஆரோக்கியபிரபு, சுதாகர், ரூபன், ராமையாபாண்டியன், மாலிக்பாட்சா ஆகிய 5 பேரும் மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர். அவர்களை சிறையில் அடைக்குமாறு மாவட்ட முதன்மை நீதிபதி நஸிமாபானு உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்களை போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.