பெங்களூருவில் பரப்பன அக்ரஹாரா சிறையில் போலீசார் திடீர் சோதனை
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது செல்போன்கள், கஞ்சா மற்றும் ஆயுதங்கள் சிக்கின. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சிறையில் இருந்தபடியே ரவுடிகள் தங்களது கூட்டாளிகள் மூலம் அரசியல் பிரமுகர்களை மிரட்டி பணம் வசூலிப்பதாகவும், செல்போன்களை பயன்படுத்துவதாகவும் குற்றப்பிரிவு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதுதவிர கைதிகள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் அலோக்குமார் தலைமையில் நேற்று முன்தினம் இரவு பரப்பனஅக்ரஹாரா சிறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் 6 துணை போலீஸ் கமிஷனர்கள், 15 உதவி போலீஸ் கமிஷனர்கள், 30 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.
சிறையின் ஒவ்வொரு அறைகள், கழிவறை உள்ளிட்ட பகுதிகளில் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. இரவு 7 மணியில் இருந்து 10.30 மணிவரை நடந்த சோதனையின் போது கைதிகளிடம் இருந்து 15-க்கும் மேற்பட்ட செல்போன்கள், சிம்கார்டுகள், பென் டிரைவ், பணம் மற்றும் கஞ்சா, பீடி, சிகரெட் போன்றவை சிக்கியது. அதனை போலீசார் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். பரப்பனஅக்ரஹாரா சிறையில் 800-க்கும் மேற்பட்ட கழிவறைகள் உள்ளன. கழிவறைகளில் தான் கைதிகள் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாகவும், அங்கு நடத்திய சோதனையின் போது தான் கஞ்சா, ஆயுதங்கள் கிடைத்ததாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பரப்பனஅக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிறையில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் செல்போன்கள், கஞ்சா, ஆயுதங்கள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.