எனக்கும், எனது குடும்பத்துக்கும் தி.மு.க.-காங்கிரஸ் கட்சியினர் அச்சுறுத்தல் கரூரில் தேர்தல் அதிகாரி அன்பழகன் பேட்டி


எனக்கும், எனது குடும்பத்துக்கும் தி.மு.க.-காங்கிரஸ் கட்சியினர் அச்சுறுத்தல் கரூரில் தேர்தல் அதிகாரி அன்பழகன் பேட்டி
x
தினத்தந்தி 16 April 2019 11:15 PM GMT (Updated: 16 April 2019 8:18 PM GMT)

தேர்தலை நடுநிலையுடன் நடத்த இடையூறு செய்வதாகவும், எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் தி.மு.க.வினர் அச்சுறுத்தல் செய்வதாகவும் கரூரில் தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகன் பரபரப்பு பேட்டி அளித்தார்.

கரூர்,

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், வேடசந்தூர், விராலிமலை, மணப்பாறை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த தொகுதியில் சுமார் 13½ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தி.மு.க., காங்கிரஸ், அ.ம.மு.க., மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் என 42 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று கரூர் மனோகரா கார்னில் பிரசாரத்தை முடித்திட அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் முனைப்பு காட்டினர். அந்த இடத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்தல் பணிமனை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தாங்கள் முறைப்படி இணையதளத்தில் விண்ணப்பித்தும் இறுதி கட்ட பிரசாரத்தை கரூர் மனோகரா கார்னரில் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி கடந்த 14-ந்தேதி மதியம் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்டோர் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி சரவணமூர்த்தியை சந்தித்து முறையிட்டதோடு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் பொதுபார்வையாளர் பிரசாந்த்குமார், செலவின பார்வையாளர் மனோஜ்குமார் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப் பட்டது. பின்னர் தங்களுக்கு 16-ந்தேதி (நேற்று) மாலை 4 மணி முதல் 6 மணி வரை மனோகரா கார்னரில் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொண்டர்களுடன் கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர், கரூர் நாடாளுமன்ற தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அன்பழகனை சந்தித்து, தங்களுக்கும் கரூர் மனோகரா கார்னரில் இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொள்ள அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பின்னர் தாங்கள் திட்டமிட்டபடி கரூர் மனோகரா கார்னரில், அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரையின் பிரசாரத்தை நிறைவு செய்வோம் என அமைச்சர் பேட்டி அளித்தார். கரூர் மனோகரா கார்னரில் இறுதி கட்ட பிரசாரத்தை நிறைவு செய்ய அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் தீவிரம் காட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், மனோகரா கார்னரில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 11.45 மணியளவில், கரூர் தாந்தோன்றிமலையில் கலெக்டர் அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் (வீடு) சில நபர்கள் திரண்டு வந்து கதவினை தட்டி கூச்சலிட்டதாக தெரிகிறது. பின்னர் போலீசார் வரவழைக்கப்பட்டு அந்த நபர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

இதையொட்டி நேற்று மதியம் 12 மணியளவில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக அதிகாரிகளை அச்சுறுத்தும் விதமாக சில சம்பவங்கள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 11.45 மணியளவில் வழக்கறிஞர் செந்தில் உள்ளிட்டோர் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி உத்தரவின்பேரில் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி அறிவுறுத்தலின்பேரில் என்னுடைய வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டனர்.

நான், போனில் அவர்களை தொடர்பு கொண்டு ஏதாவது கோரிக்கை என்றால் காலையில் மனு கொடுங்கள், பேசிக்கொள்வோம் என்றேன். ஆனால் முடியாது என கூறிவிட்டு, 20 முதல் 30 இருசக்கர வாகனம் மற்றும் 5-க்கும் மேற்பட்ட கார்களில் வந்திருந்த 100 பேர் எனது உயிருக்கும், எனது குடும்பத்துக்கும் அச்சுறுத்தும் ஏற்படுத்தும் விதமாக வீட்டின் கதவினை தள்ளி உள்ளே நுழைய முயன்றனர்.

வீட்டின் முன்பு அவர்கள் கூடி நின்று நகர மறுத்ததால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு போன் செய்து அவரை வரவழைத்தேன். பின்னர் அவர் தான் எங்களுக்கு பாதுகாப்பு அளித்தார். இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு வருவாய் கோட்டாட்சியரை 6 மணி நேரம் அவர்கள் சிறைபிடித்து வைத்தனர். ஜனநாயகப்படி இது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. இடையூறு இன்றி அதிகாரிகளை செயல்பட அனுமதித்தால்தான் அவர்கள் நடுநிலையுடன் செயல்பட்டு தேர்தலை நடத்திட முடியும். இந்த விதிமீறல் சம்பந்தமாக தேர்தல் ஆணையம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். தேர்தல் ஆணையம் உத்தரவின்பேரில் எதிர்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story