மாணவர்கள் இணையதளத்தின் மூலம் இந்தியாவில் சிறந்த ஆய்வகங்களை பயன்படுத்தலாம் ஆய்வக தலைவர் தகவல்


மாணவர்கள் இணையதளத்தின் மூலம் இந்தியாவில் சிறந்த ஆய்வகங்களை பயன்படுத்தலாம் ஆய்வக தலைவர் தகவல்
x
தினத்தந்தி 16 April 2019 10:30 PM GMT (Updated: 16 April 2019 9:43 PM GMT)

மாணவர்கள் இணையதளத்தின் மூலம் இந்தியாவில் உள்ள சிறந்த ஆய்வகங்களை பயன்படுத்தலாம் என்று ஆய்வக தலைவர் கூறினார்.

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஐ.ஐ.டி. புதுடெல்லி ஆகியவை இணைந்து மெய்நிகர் ஆய்வகங்கள் என்ற கருத்துப்பட்டறையை நடத்தின. கல்லூரி அறிவியல் வளாக கருத்தரங்க அறையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக பதிவாளர் குருமல்லேஷ் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசும் போது, அழகப்பா பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்படும் இந்த கருத்துப்பட்டறை மாணவர்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர்களும் பயனடையும் வாய்ப்பு உள்ளது. மேலும் பல்கலைக்கழகத்தின் தர மதிப்பீடுகள் மற்றும் அங்கீகாரங்கள் மூலம் பயன் பெறும் வகையில் இதுபோன்ற கருத்துப்பட்டறைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றார்.

புதுடெல்லி ஐ.ஐ.டி.யின் மெய்நிகர் ஆய்வக துறை தலைவர் அக்தல் கூறும்போது, மாணவர்கள் தாங்கள் இருந்த இடத்திலிருந்து கணினி மற்றும் இணையதளத்தின் மூலமாக இந்தியாவிலுள்ள தலைசிறந்த ஆய்வகங்களை பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்வதே இந்த கருத்துப்பட்டறையின் உயரிய நோக்கமாகும்.

தமிழ்நாட்டிலேயே காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தான் முதல் முறையாக இதுபோன்ற கருத்துப்பட்டறை நடத்தப்படுகிறது என்றார். முன்னதாக கணினி அறிவியல் துறைத் தலைவர் ராமராஜ் அனைவரையும் வரவேற்றார். இதில் கணினி அறிவியல் துறை மற்றும் கணினி தளவாட மேலாண்மை துறைகளை சேர்ந்த 150–க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துறை பேராசிரியர் மெய்யப்பன் நன்றி கூறினார்.


Next Story