நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போலீஸ் சூப்பிரண்டு தகவல்


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x
தினத்தந்தி 17 April 2019 10:30 PM GMT (Updated: 17 April 2019 6:31 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாநில எல்லையோர சோதனை சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல், ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்தலை முன்னிட்டு மாவட்ட காவல் துறையினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், கேரள மாநிலத்தை சேர்ந்த அதிரடிப்படையினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் உள்பட 3 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேர்தலின் போது எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் இருக்க ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் 3-ஆக பிரித்து வேற்று மாவட்ட இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் அதிரடி படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மதுவிற்பனை செய்ய கூடாது என்ற அறிவிப்பை மீறி மது விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குச்சாவடிகளில் 100 மீட்டருக்கு உள்ளாக எவ்வித வாகனமும் அனுமதிக்கப்படமாட்டாது. அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூடாது. மீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரச்சினைக்குரிய நபர்கள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 306 நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநில எல்லையோர சோதனை சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசாரை கொண்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உள்ளே வரும் அனைத்து வாகனங்களும் சோதனை சாவடிகளில் முழுமையான பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும். அனைத்து சோதனை சாவடிகளும் சி.சி.டிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் சி.சி.டிவி கேமரா பொருத்தப்பட்டு, சென்னையிலிருந்து நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story