பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியீடு: மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் 95.37 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை


பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியீடு: மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் 95.37 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
x
தினத்தந்தி 19 April 2019 11:15 PM GMT (Updated: 19 April 2019 6:52 PM GMT)

பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. 95.37 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

திருப்பூர், 

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தமிழக அளவில் திருப்பூர் மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 203 பள்ளிகளில் 11 ஆயிரத்து 251 மாணவர்கள், 13 ஆயிரத்து 584 மாணவிகள் என 24 ஆயிரத்து 835 பேர் தேர்வு எழுதினார்கள். இவர்களில் 10 ஆயிரத்து 624 மாணவர்கள், 13 ஆயிரத்து 62 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 686 பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். மாணவர்கள் 94.43 சதவீதமும், மாணவிகள் 96.16 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 95.37 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று தமிழக அளவில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பிளஸ்-2 தேர்ச்சி சதவீதத்தில் கடந்த 2014-ம் ஆண்டு 11-வது இடத்தையும், 2015-ம் ஆண்டு 10-வது இடத்தையும், 2016-ம் ஆண்டு 6-வது இடத்தையும், 2017-ம் ஆண்டு 8-வது இடத்தையும், 2018-வது ஆண்டு 3-வது இடத்தையும் பெற்று தற்போது மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

பிளஸ்-2 தேர்வு முடிவுகளை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி பெற்றுக்கொண்டார்.

இது குறித்து கலெக்டர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகியிருக்கிறது. மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் 95.37 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சாதனையை எட்டிப்பிடித்த முதன்மை கல்வி அதிகாரி, திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுக்கள். தேர்வு எழுதி சாதனை படைத்த மாணவ-மாணவிகள் உயர்ந்த நிலையை அடைந்து அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சாதனை என்பது உடனடியாக கிடைத்து விடவில்லை. கடந்த ஆண்டுகளில் கல்வித்துறையினர், ஆசிரியர்கள், மாணவர்கள் தொடர்ந்து விடாமுயற்சி செய்து முதலிடத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள். மேலும் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 697 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதியதில் 2 ஆயிரத்து 404 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதுபோல் சிறைகைதிகள் 45 பேர் தேர்வு எழுதியதில் 34 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், உடன் இருந்தார்.

Next Story