சென்னை விமான நிலையத்தில் ரூ.46 லட்சம் அமெரிக்க டாலர் கடத்த முயன்ற மலேசிய பெண் கைது ரூ.5¾ லட்சம் கடத்தல் தங்கமும் சிக்கியது


சென்னை விமான நிலையத்தில் ரூ.46 லட்சம் அமெரிக்க டாலர் கடத்த முயன்ற மலேசிய பெண் கைது ரூ.5¾ லட்சம் கடத்தல் தங்கமும் சிக்கியது
x
தினத்தந்தி 25 April 2019 10:30 PM GMT (Updated: 25 April 2019 6:43 PM GMT)

சென்னை விமானநிலையத்தில் ரூ.46 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் கடத்த முயன்ற மலேசிய பெண் கைது செய்யப்பட்டார். மேலும் ரூ.5¾ லட்சம் கடத்தல் தங்கமும் சிக்கியது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு செல்லும் விமானத்தில் பெரும் அளவில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு செல்ல மலேசியாவை சேர்ந்த ஸ்ரீதேவி (வயது 54) என்ற பெண் வந்தார். சந்தேகத்தின்பேரில் அவரை நிறுத்தி விசாரித்தனர். ஆனால் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது துணிகளுக்கு இடையே கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். ரூ.46 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் மலேசிய பெண் ஸ்ரீதேவியை கைது செய்து, யாருக்காக அமெரிக்க டாலர்கள் கடத்தப்படுகிறது? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சென்னை விமானநிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த சையத் இப்ராகிம்(39) என்பவர் சுற்றுலாவில் சென்றுவிட்டு திரும்பி இருந்தார். அவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள 81 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதேபோல் கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த சையத் முகமது (28) என்பவரும் உள்ளாடைக்குள் மறைத்து ரூ.3 லட்சத்து 27 ஆயிரம் மதிப்புள்ள 100 கிராம் தங்கத்தை கடத்தி வந்தார். இந்த தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஒரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.5 லட்சத்து 92 ஆயிரம் மதிப்புள்ள 181 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். இதுதொடர்பாக 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story