தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய முடிவு: அ.தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது - புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி


தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய முடிவு: அ.தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது - புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 28 April 2019 5:00 AM IST (Updated: 28 April 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய முடிவு செய்ததன் மூலம் அ.தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மதுரை,

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். கோவிலில் சாமி தரிசனம் முடிந்தபிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மத்தியில் ஆளும் மோடி ஆட்சியின் அவலங்கள் குறித்து பிரசாரம் செய்துள்ளோம். எனவே தேர்தல் முடிவுகள் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக இருக்கும். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலும், மத்தியில் ராகுல்காந்தி தலைமையிலும் விரைவில் ஆட்சி மலரும். தமிழகத்தில் நடந்து முடிந்த 18 சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

தமிழகத்தை மோடி புறக்கணித்து வருகிறார். கஜா புயல் நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டது. ஆனால் மத்திய அரசு கொடுத்தது வெறும் ரூ.500 கோடி மட்டுமே. இதனால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் பானி புயல் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை எதிர்கொள்ள புதுவை அரசு தயாராக உள்ளது.

டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேரை தகுதிநீக்கம் செய்ய முடிவு செய்திருப்பதன் மூலம் தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. எதிர்க்கட்சியின் பலத்தை உடைக்க அ.தி.மு.க. அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஜனநாயக நாட்டில் சபாநாயகரின் இந்த செயல் எல்லை மீறியது. 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை. சபாநாயகர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார்.

பிரதமர் மோடி தென் மாநிலங்களை புறக்கணித்ததால் தான் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடுகிறார். வடமாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அதிகரித்து உள்ளது என்பதை நடந்த 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகிறது.

கட்சி கட்டளையிட்டால் நான் வாரணாசியில் போட்டியிடுவேன் என்று பிரியங்கா காந்தி கூறியிருந்தார். கட்சி தலைமை வேறு முடிவு எடுத்துள்ளது.

எனவே தான் அவர் அங்கு போட்டியிடவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story