திருச்சி அருகே பரிதாபம்: காவிரி ஆற்றில் மூழ்கி அக்காள்- தம்பி பலி


திருச்சி அருகே பரிதாபம்: காவிரி ஆற்றில் மூழ்கி அக்காள்- தம்பி பலி
x
தினத்தந்தி 29 April 2019 4:30 AM IST (Updated: 29 April 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி அக்காள்-தம்பி பரிதாபமாக இறந்தனர்.

ஜீயபுரம்,

திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்தவர் ரெங்கசாமி. இவருடைய மனைவி முத்துக்கண்ணு. இத்தம்பதியின் மகன் தரண்(வயது 17), மகள் கிருத்திகா(15). இதில் தரண் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை சேர்ந்த கோபி- சந்திரா தம்பதியின் மகன் ஹரிஹர தீபக்(8). இதில் சந்திரா, முத்துக்கண்ணுவின் தங்கை ஆவார். ஹரிஹர தீபக் குஜிலியம்பாறையில் உள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது பள்ளிக்கு கோடை விடுமுறை என்பதால், சந்திரா ஹரிஹர தீபக்பை அழைத்துக்கொண்டு திருச்சியில் உள்ள முத்துக்கண்ணு வீட்டிற்கு வந்திருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை முத்துக்கண்ணு, சந்திரா, தரண், கிருத்திகா, ஹரிஹர தீபக் ஆகியோர் முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு சென்றனர். அங்கு ஊஞ்சல், ராட்டினங்கள் உள்ளிட்டவற்றில் விளையாடி மகிழ்ந்த அவர்கள், மதிய நேரத்தில் காவிரி ஆற்றில் இறங்கி குளிக்க விரும்பினர். அதன்படி அங்கு தேங்கி நின்ற தண்ணீரில் 5 பேரும் இறங்கி, குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்ற கிருத்திகா, தரண், ஹரிஹர தீபக் ஆகியோர் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்கள். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துக்கண்ணு, சந்திரா ஆகியோர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அலறினார்கள். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்து தண்ணீரில் மூழ்கிய 3 பேரையும் மீட்டனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 3 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கிருத்திகா, ஹரிஹர தீபக் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். தரண் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி அக்காள்-தம்பி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story