திருப்பூரில் சோக சம்பவம்: பாறைக்குழி நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலி


திருப்பூரில் சோக சம்பவம்: பாறைக்குழி நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
x
தினத்தந்தி 28 April 2019 11:00 PM GMT (Updated: 28 April 2019 7:05 PM GMT)

திருப்பூரில் பாறைக்குழி நீரில் மூழ்கி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள். குளிப்பதற்காக இறங்கியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் புதுராமகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. பனியன் நிறுவன அதிபர். இவருடைய மகன் ஹரிஹரசேதுபதி (வயது 16). இவனுடைய நண்பன் கொங்குமெயின் ரோடு டி.எஸ்.ஆர்.லே அவுட் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி–கவிதா தம்பதியின் மகன் கோகுல் (16). இவர்கள் 2 பேரும் கூலிப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தனர். தற்போது பிளஸ்–1 தேர்வு முடிந்துள்ள நிலையில், விடுமுறை என்பதால் இவர்கள் இருவரும் பாறைக்குழிக்கு சென்று குளிக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

அதன்படி நேற்று ஒரு மொபட்டில் ஹரிஹரசேதுபதி, கோகுல் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த சுஜித் ஆகிய 3 பேரும் அம்மாபாளையம் நெசவாளர் காலனி பகுதியில் உள்ள நாகராஜ் என்பவருக்கு சொந்தமான பாறைக்குழிக்கு குளிக்க சென்றனர்.

இந்த பாறைக்குழி 150 அடி ஆழம் கொண்டது. இதில் 7 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரும் பாசிபடர்ந்து காணப்பட்டது. இதையடுத்து இவர்கள் 3 பேரும் தாங்கள் வந்த மொபட்டை பாறைக்குழியின் ஓரத்தில் நிறுத்தினார்கள். பின்னர் ஒவ்வொருவராக பாறைக்குழிக்குள் இறங்கினார்கள். அதை தொடர்ந்து அங்குள்ள தண்ணீரில் குளிக்க முதலில் ஹரிஹரசேதுபதி இறங்கினான். அப்போது அங்கு சேறும், சகதியுமாக இருந்ததால் தண்ணீருக்குள் திடீரென்று மூழ்கினான். இதனால் அதிர்ச்சியடைந்த கோகுல், தனது கையை நீட்டி ஹரிஹரசேதுபதியை மீட்க முயன்றான். ஆனால் அவனால் முடியவில்லை. அப்போது கோகுலும் தண்ணீருக்குள் விழுந்து மூழ்கினான். இதையடுத்து வெளியில் நின்று கொண்டிருந்த சுஜித், பேண்டை எடுத்து போட்டு அதை பிடிக்குமாறு அவர்களிடம் கூறினான்.

அதற்குள் அவர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கினார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த சுஜித் ‘‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’’ என்று அபயக்குரல் எழுப்பினான். இதற்கிடையில் சிறுவனின் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடிச்சென்று நீரில் மூழ்கிய மாணவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களாலும் முடியவில்லை. இதையடுத்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கும், திருமுருகன் பூண்டி போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய அதிகாரி பாஸ்கரன் தலைமையில் தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் விரைந்து வந்து பாறைக்குழியில் இறங்கி, ஹரிஹரசேதுபதி மற்றும் கோகுல் உடல்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அங்கு மாணவர்களின் உடல்களை பார்த்து அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. அதன்பின்னர் மாணவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து திருமுருகன் பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாறைக்குழிக்கு குளிக்க சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாறைக்குழியில் மூழ்கி பலியான மாணவர்கள் இரண்டு பேருக்கும் நீச்சல் தெரியாததே முக்கிய காரணமாகும். பொதுவாக நீச்சல் பயிற்சி தெரிந்து இருந்தால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு இல்லை. எனவே ஆண்டு இறுதி தேர்வு முடிந்ததும், மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு உயிர்காக்கும் நீச்சல் பயிற்சியை கற்றுக்கொடுப்பது அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்வுகள் முடிந்து உள்ள நிலையில் மாணவர்கள் தங்களது நண்பர்களுடன் வெளியில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்போது நீர்நிலைகளை கண்டால் அவர்களுக்கு அதில் குளிக்க வேண்டும் என்கிற இயற்கையான மனோபாவம் ஏற்படுகிறது. திருப்பூரை சுற்றி உள்ள பாறைக்குழிகள் 100 அடிக்கு மேல் ஆழம் கொண்டவை. அனைத்து பாறைக்குழிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே மாணவ–மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பாறைக்குழிகளை சுற்றி கம்பி வேலி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹரிஹரசேதுபதி அவருடைய பெற்றோருக்கு ஒரே மகன். அதுபோல் கோகுலும் அவருடைய பெற்றோருக்கு ஒரே மகன். மகன்களை பறிகொடுத்த பெற்றோர், அவர்களின் உடல்களை பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர். அது போல் மாணவர்களுடன் குளிக்க சென்ற சிறுவன் சுஜித்தும் அழுது கொண்டே இருந்தான். நண்பர்களை பறிகொடுத்த சோகத்தில் இருந்து அவனால் மீள முடியவில்லை.


Next Story