டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி 10 கார்களை விற்று மோசடி - உரிமையாளர் உள்பட 2 பேர் கைது


டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி 10 கார்களை விற்று மோசடி - உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 April 2019 4:00 AM IST (Updated: 29 April 2019 4:44 AM IST)
t-max-icont-min-icon

டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி 10 கார்களை விற்று மோசடி செய்த உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திண்டுக்கல்,

திண்டுக்கல் குள்ளனம்பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ். அவருடைய மகன் ஜான்ஜெயசீலன் (வயது 31). இவர், திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் தங்கள் கார்களை சிலர் வாடகைக்காக கொடுத்துள்ளனர். அந்த கார்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் அவர்களுக்கு ஜான்ஜெயசீலன் வாடகை செலுத்தி வந்தார்.

இந்த நிலையில் சின்னாளப்பட்டியை சேர்ந்த ரஞ்சித்சாமுவேல் என்பவர், திண்டுக்கல் நகர் வடக்கு போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், என்னுடைய காரை வாடகைக்காக ஜான்ஜெயசீலனிடம் கொடுத்தேன். ஆனால் அவர், எனக்கு தெரியாமலேயே காரை விற்பனை செய்து மோசடி செய்துள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வாடகைக்காக அவரிடம் கொடுத்த 10 கார்களை, அதன் உரிமையாளர்களுக்கு தெரியாமல் ஜான்ஜெயசீலன் விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. அவை நெல்லை, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் விற்றுள்ளனர்.

மேலும் கார்களை விற்பனை செய்வதற்கு குள்ளனம்பட்டியை சேர்ந்த பாஷா (40) என்பவர் உதவியுள்ளார். இதனையடுத்து ஜான்ஜெயசீலன், பாஷா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் வெளிமாவட்டங்களில் விற்கப்பட்ட கார்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

Next Story