தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் 40 மேல்முறையீட்டு மனுக்கள் மீது ஆணையர்கள் விசாரணை


தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் 40 மேல்முறையீட்டு மனுக்கள் மீது ஆணையர்கள் விசாரணை
x
தினத்தந்தி 30 April 2019 10:45 PM GMT (Updated: 2019-05-01T03:26:10+05:30)

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் 40 மேல்முறையீட்டு மனுக்கள் மீது திண்டுக்கல்லில் மாநில ஆணையர்கள் விசாரணை நடத்தினர். அப்போது தகவல் அளிக்காத அதிகாரிகளை எச்சரிக்கை செய்தனர்.

திண்டுக்கல்,

மத்திய, மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அனைவரும் பெறலாம். இதற்காக சம்பந்தப்பட்ட துறையில் மனு செய்து தகவல் கிடைக்காத நிலையில், துறையின் உயர் அதிகாரிக்கு மனு செய்யலாம். உயர் அதிகாரியும் தகவல் அளிக்காத நிலையில் மாநில தகவல் ஆணையரிடம் மேல்முறையீடு செய்யலாம்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 ஆயிரத்து 500 மேல் முறையீடு மனுக்கள் குவிகின்றன. அதில் தகுதியான மனுக்களை தேர்வு செய்து, அந்தந்த மாவட்டங்களுக்கே சென்று தகவல் ஆணையர்கள் விசாரணை நடத்துகின்றனர். அதன்படி திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த 40 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் பற்றிய விசாரணை, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் மாநில தகவல் ஆணையர்கள் பிரதாப்குமார், முத்துராஜ் ஆகியோர் மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்தனர். அப்போது மனுதாரர்கள் மற்றும் தகவல் அளிக்காத சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து ஆணையர்கள் விசாரணை நடத்தினர். அதில் ஒருசில அதிகாரிகள் உடனடியாக தகவல் அளிப்பதாக தெரிவித்தனர்.

மேலும் ஒருசில அதிகாரிகள் தகவல் அளிப்பதற்கு, ஆணையர்கள் அவகாசம் அளித்தனர். அந்த அவகாசத்துக்குள் தகவல் அளிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்தனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விதிகளை பின்பற்றி மனுதாரர்களுக்கு உரிய தகவல்களை அளிக்க வேண்டும் என்றனர்.


Next Story