நாகையில், ஆசிரியையை தாக்கி 3 பவுன் சங்கிலி பறிப்பு - மர்மநபருக்கு வலைவீச்சு


நாகையில், ஆசிரியையை தாக்கி 3 பவுன் சங்கிலி பறிப்பு - மர்மநபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 11 May 2019 10:15 PM GMT (Updated: 11 May 2019 8:52 PM GMT)

நாகையில் ஆசிரியையை தாக்கி 3 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நாகப்பட்டினம்,

நாகை வெளிப்பாளையம் வண்டிப்பேட்டை தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மனைவி கவுரிலதா (வயது35). இவர் நாகையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கோடைக்கால தையல் பயிற்சி அளிக்கும் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரி அருகே உள்ள கழிவறைக்கு சென்றுவிட்டு, கவுரிலதா வெளியே வந்தார்.

அப்போது அவர் பின்னால் நின்று கொண்டிருந்த மர்ம நபர் திடீரென கவுரிலதாவை கட்டையால் அவரது தலையில் பலமாக தாக்கினார்.

இதனால் கவுரிலதா நிலைதடுமாறி கீழே விழுந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர் கவுரிலதா அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். உடனே சம்பவ இடத்துக்கு வந்த அக்கம்பக்கத்தினர் கவுரிலதாவை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வெளிப்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். ஆசிரியையின் தலையில் கட்டையால் தாக்கி சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story