ஏற்காட்டில் இரட்டை கொலை: கைதான வாலிபரை காவலில் எடுத்து விசாரணை வனப்பகுதிக்கு அழைத்து சென்றும் விசாரித்தனர்


ஏற்காட்டில் இரட்டை கொலை:  கைதான வாலிபரை காவலில் எடுத்து விசாரணை  வனப்பகுதிக்கு அழைத்து சென்றும் விசாரித்தனர்
x
தினத்தந்தி 17 May 2019 11:00 PM GMT (Updated: 17 May 2019 2:15 PM GMT)

ஏற்காட்டில் இரட்டை கொலை வழக்கில் கைதான வாலிபரை வனப்பகுதிக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

ஏற்காடு, 

சேலம் மாவட்டம் ஏற்காடு தெப்பக்காடு கிராமத்தில் கடந்த 7–ந்தேதி அதே கிராமத்தை சேர்ந்த பெரியான், வெள்ளையம்மாள் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இரட்டை கொலை தொடர்பாக ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் சரவணன் (வயது 25) என்பவர் கைது செய்யப்பட்டார்.

காட்டில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெரியானிடம் சரவணன் மது குடிக்க பணம் கேட்டதாகவும், பணம் தராததால், அவரை கொலை செய்ததாகவும், இதை பார்த்த அவரது அக்காள் வெள்ளையம்மாளையும் கொலை செய்ததாக போலீசில் சரவணன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கைதான சரவணனிடம் போலீசார் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அவர் மேலும் 2 கொலைகளை செய்துள்ளதாக கூறியுள்ளார். இதை யடுத்து சரவணனை நீதிமன்ற காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கடந்த 2012–ம் ஆண்டு தெப்பக்காடு கிராமத்தை சேர்ந்த வடிவேல் மகன் சரவணன் என்பவருடன் சேர்ந்து திருவாரூர் காஞ்சனேரி கிராமத்தில் உள்ள மர மில்லில் வேலை செய்ததாகவும், இதற்காக இருவரும் சேர்ந்து வீடு எடுத்து தங்கியதாகவும், விடுமுறையில் அறையில் தூங்கி கொண்டிருந்த வடிவேல் மகன் சரவணனை கழுத்தை கயிற்றால் இறுக்கி கென்றதாகவும் கூறியுள்ளார். பின்னர் உடலை வீட்டின் பின் புறம் இருந்த ஆற்றில் வீசி விட்டு, மரமில்லில் வேலை செய்தவர்களிடம் வடிவேல் மகன் சரவணன் ரூ.1000–ஐ எடுத்து கொண்டு சென்று விட்டதாக சரவணன் கூறியுள்ளார்.

மேலும் கடந்த 2011–ம் ஆண்டு தெப்பக்காடு கிராமத்தில், அந்த கிராமத்தை சேர்ந்த அழகேசன் மகன் ஜெயபால் என்பவரை கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் கொன்று எரித்ததாகவும் கூறியுள்ளார்.

மேற்கண்ட தகவல்களை சரவணன் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

இதையடுத்து ஏற்காடு போலீசார், வருவாய் மற்றும் வனத்துறையினருடன் ஜெயபாலை கொலை செய்ததாக கூறிய தெப்பக்காடு கிராமத்தை ஒட்டிய வனப்பகுதிக்கு சரவணனை அழைத்து சென்றனர். அங்கு சரவணனிடம் விசாரணை நடத்தினர். மேலும் அங்கு ஜெயபால் டலை தேடுதல் பணியிலும் ஈடுபட்டனர். ஆனால் உடல் கிடைக்காதால், அங்கிருந்து திரும்பினர்.

Next Story