நிலத்தடி நீர்மட்டம் குறைவதால், பருத்தி சாகுபடிக்கு தண்ணீர் கிடைப்பதில் சிரமம் - விவசாயிகள் வேதனை
நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் பருத்தி சாகுபடிக்கு தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கொரடாச்சேரி,
பருவமழை பொய்த்து போனதாலும், மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததாலும் குறுவை நெல் சாகுபடியை மேற்கொள்ள விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். பருத்தி சாகுபடிக்கு குறைவான தண்ணீர் போதும் என்பதாலும் தற்போது பருத்தி பஞ்சுக்கு ஓரளவு திருப்தியான விலை கிடைப்பதாலும் விவசாயிகள் குறுவை சாகுபடியை குறைத்துக் கொண்டு பருத்தி சாகுபடிக்கு திரும்பியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் ஆண்டுதோறும் 2,500 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருத்தி சாகு படிக்கு குறைந்த தண்ணீர் போதுமானது என்றாலும், அந்த குறைந்த தண்ணீர் கிடைப்பதிலும் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பருத்தி சாகுபடி முற்றிலும் ஆழ்குழாய் பாசனத்தினை நம்பியே உள்ள நிலையில் கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை. தற்போது கோடை வெப்பம் அதிகரித்து நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் பருத்தி வயலுக்கு போதிய அளவு கால இடைவெளியில் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் பருத்தி பயிர்கள் பாதிக்கப் படும் அபாயம் ஏற்பட்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தற்போது பருத்தி பூ வைக்கும் காலம் என்பதால் பருத்திக்கு தேவையான தண்ணீர் தேவை. இதற்கு ஏற்ற வகையில் நிலத்தடி நீர்மட்டம் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கோடை மழை பெய்தால் மட்டுமே பருத்தி சாகுபடிக்கு ஏற்ற சூழல் உருவாகும். எனவே கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீரை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் அடிப் படையில் மேட்டூர் அணையினை திறந்து காவிரி டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story