நந்தியாலம் ஏரியில் ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க மின்சாரம் திருட்டு
நந்தியாலம் ஏரியில் ஆழ்துளை கிணறு அமைத்து மின்சாரத்தை திருடி தண்ணீர் பாய்ச்சுபவர் மீது நடவடிக்கை எடுக்க உதவி கலெக்டர் உத்தரவிட்டார்.
ஆற்காடு,
வாலாஜா தாலுகா நந்தியாலம் ஏரியில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து மா மரங்களை வளர்த்து வருவதாகவும் அதற்கு ஆழ்துளை கிணறு அமைத்து மின்சாரத்தை திருடி நீர் பாய்ச்சி வருவதாகவும் உதவிகலெக்டர் இளம்பகவத்திடம் மாங்குப்பம் ஊர் பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து உதவி கலெக்டர் இளம்பகவத், நேற்று அப்பகுதியில் திடீர் ஆய்வு செய்தார். அவருடன் ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் ராஜேந்திரன், மின்வாரிய பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்
அப்போது, ஏரியில் மாமரங்கள் வளர்ந்துள்ளதும், ஆழ்துளை கிணறு அமைத்து அருகில் உள்ள விவசாய மின் இணைப்பிலிருந்து மின்சாரத்தை திருடி தண்ணீர் எடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு மின் திருட்டில் ஈடுபட்ட மாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் என்ற கேசவன் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆற்காடு மின் வாரிய செயற்பொறியாளருக்கு, உதவி கலெக்டர் இளம்பகவத் உத்தரவிட்டார்.
மேலும் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் நந்தியாலம் ஏரியின் எல்லை கற்களை நிர்ணயம் செய்து, எல்லையைச் சுற்றி நிறைவு செய்யாமல் உள்ள அகழி வெட்டும் பணியை 10 நாட்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும். ஏரியின் நிலப்பகுதிக்குள் வரும் மரங்களை வகைப்படுத்தி எண்கள் இட்டு அதனை உரிய பதிவேடுகளில் பதிவு செய்து அரசுக்கு சொந்தமான மரமாக அறிவிக்க வேண்டும்.
நந்தியாலம் ஏரியின் நிலப்பரப்பை அளவு செய்து எல்லைக்கற்கள் நட, நில அளவையர், நிலத்தை அளந்து எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும். அதன் மீது வாலாஜா தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உரிய கவனம் செலுத்தி ஒரு வார காலத்திற்குள் முடிவு எடுத்து பணிகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின்படி மரங்களின் பலன்களை அனுபவிக்க உரிமை கோரி மனு எதுவும் அளிக்கப்பட்டால், பொதுப்பணித்துறையின் கருத்தினை பெற்று, வருவாய் துறையின் உரிய விதிமுறைகளை பின்பற்றி மனுக்களை பரிசீலனை செய்துமுடிவெடுக்க வேண்டும்.
ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள ஆழ்துளை கிணறு பட்டா நிலத்தில் அமைந்துள்ளதா அல்லது பொதுப்பணித்துறை நிலத்தில் அமைந்துள்ளதா என்பதனை உறுதிசெய்து, பொதுப்பணித்துறை நிலத்தில் அமைந்திருந்தால் அதனை ஊராட்சியின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, அதன் மோட்டார் மற்றும் மின் சாதனங்களை கையகப்படுத்தி ஊராட்சியில் குடிநீர் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story