பருத்தியை பொது ஏலம் விடும் முறையை அமல்படுத்த வேண்டும் விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்
காரைக்காலில் பருத்தியை பொது ஏலம் விடும் முறையை அரசு ஏற்படுத்த வேண்டும். என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
காரைக்கால்,
அகில இந்திய விவசாயிகள் சங்க காரைக்கால் மாவட்டத் தலைவர் முத்துக்குமாரசாமி இதுகுறித்து, கூறியதாவது:-
காரைக்கால் மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் 3 கட்டமாக அறுவடை செய்வார்கள். அடுத்த 20 நாள்களில் முதல் கட்டமாக அறுவடை செய்யக் கூடிய வகையில் பருத்தி பயிர் பல இடங்களில் தயாராகி வருகிறது. தனியார் கொள்முதலாளர்கள் குறைந்த விலையை நிர்ணயித்துக்கொண்டு விவசாயிகளின் உற்பத்தியை அந்தந்த இடத்திலேயே வாங்கிச் செல்கின்றனர். இது பயிரிட்ட விவசாயிக்கு உரிய லாபத்தை தருவதாக இல்லை.
மேலும், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூட கிடங்கில், விவசாயிகள் உற்பத்தி செய்த பருத்தி சேமிக்கச் செய்து, தமிழகப் பகுதியிலிருந்து வேளாண் துறை மூலம் கொள்முதலாளர்கள் வரவழைக்கப்பட்டு, பொது ஏலத்தில் விடப்பட்டது. இது, பருத்தி பயிர் செய்த விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை தந்தது. இதுபோன்ற சூழலை புதுச்சேரி அரசின் வேளாண் துறை நிர்வாகம் நடப்பாண்டும் செய்ய வேண்டும். குறைந்த விலைக்கு விற்றுவரும் போக்கு தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில், அடுத்து வரும் ஆண்டுகளில் பருத்தி சாகுபடி மீதான ஆர்வம் விவசாயிகளிடையே குறையும் வாய்ப்புள்ளது. எனவே, ஒழுங்கு முறை விற்பனைக் கூட வளாகத்தில் பொது ஏலத்தில் பருத்தியை விற்பனை செய்யும் சூழலை உருவாக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
Related Tags :
Next Story