வாக்கு எண்ணிக்கையை சரியாக மேற்கொள்வது எப்படி? தேர்தல் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை


வாக்கு எண்ணிக்கையை சரியாக மேற்கொள்வது எப்படி? தேர்தல் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
x
தினத்தந்தி 18 May 2019 11:00 PM GMT (Updated: 18 May 2019 8:53 PM GMT)

வாக்கு எண்ணிக்கையை சரியான முறையில் மேற்கொள்வது எப்படி? என்பது குறித்து தேர்தல் அதிகாரிகளுடன் கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆலோசனை நடத்தினார்.

நாகர்கோவில்,

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது. கன்னியாகுமரி தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கையாள வேண்டிய நடைமுறைகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டு உள்ளது.

அதாவது, “தேர்தல் முடிவு வெளியிடப்படும் முன்னர் எக்காரணத்தை கொண்டும் தேர்தல் முடிவு தொடர்பான தகவல்களை வெளியில் தெரிவிக்க கூடாது. வாக்கு எண்ணும் மையத்துக்குள் அமைதியாக இருக்க வேண்டும். வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் செல்போன் எடுத்துச் செல்லக்கூடாது. கூர்மையான பொருட்கள், கத்தி, எளிதில் தீ பிடிக்கக்கூடிய பொருட்கள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வர அனுமதியில்லை. வெற்றி பெறும் வேட்பாளர் சான்றிதழ் பெற வரும்போது 4 நபர்களை மட்டும் அழைத்து வரலாம்“ என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் குறித்து அரசியல் கட்சி பிரமுகர்களிடம் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையை சரியாக மேற்கொள்வது எப்படி? என்பது குறித்த ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அனைத்து தொகுதிகளிலும் சுற்று வாரியாக வாக்குகள் எண்ணும் விதம், தபால் வாக்குகள், படை பணியாளர்களுக்கான வாக்குகள் மற்றும் விவிபேட் எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் விதம் ஆகியவை பற்றி பேசப்பட்டது. மேலும் வாக்கு எண்ணிக்கைக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் கலெக்டர் பிரசாந்த் வடநேரே எடுத்துரைத்தார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் வருவாய் அதிகாரி ரேவதி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ராகுல்நாத், உதவி கலெக்டர்கள் விஷ்ணு சந்திரன், சரண்யாஅரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகன்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story