அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப்கார் அமைக்கும் பணி தீவிரம்


அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப்கார் அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 20 May 2019 10:45 PM GMT (Updated: 20 May 2019 8:42 PM GMT)

அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப்கார் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திரரெட்டி ஆய்வு செய்தார்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் ரெத்தினகிரீஸ் வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலின் மலை உச்சியில் உள்ள சுவாமியை தரிசிப்பதற்கு 1,017 படிகள் ஏறிச்செல்லவேண்டும். செங்குத்தாக உள்ள இந்த மலையில் அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகளில் சிறிய குழந்தைகள், முதியவர்கள் ஏறிச்செல்வது சற்று கடினம். எனவே இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி மலை உச்சிக்கு சென்று சாமி தரிசனம் செய்யும் வகையில் ரோப்கார் அமைக்கவேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆணையர் ஆய்வு

இதையடுத்து ரோப்கார் அமைப்பதற்கான பணிகள் தொடங்க பூமிபூஜை போடப்பட்டது. பின்னர் ரோப்கார் அமைக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திரரெட்டி ரோப்கார் அமைக்கும் பணிகளை மலை உச்சிவரை சென்று ஆய்வு செய்தார்.

அக்டோபர் மாதத்திற்குள்...

இதனைதொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் இறுதிக்குள் ரோப்கார் அமைக்கும் பணிகளை முழுமையாக முடித்து பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டுமென அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார்.

அப்போது இந்து சமய அறநிலையத்துறை திருச்சி இணை ஆணையர் சுதர்சன், கரூர் உதவி ஆணையர் சூரியநாராயணன், ரெத்தினகிரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ராமமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். 

Next Story