பட்டுக்கோட்டை அருகே வறண்டு கிடக்கும் நசுவினி ஆறு அணை தூர்வார விவசாயிகள் கோரிக்கை


பட்டுக்கோட்டை அருகே வறண்டு கிடக்கும் நசுவினி ஆறு அணை தூர்வார விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 21 May 2019 10:45 PM GMT (Updated: 21 May 2019 7:11 PM GMT)

பட்டுக்கோட்டை அருகே நசுவினி ஆறு அணை தண்ணீர் இன்றி வறண்டு கிடக் கிறது. இந்த அணையை தூர்வாரி தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பட்டுக்கோட்டை,

கடந்த ஆண்டு நவம்பர் வீசிய கஜா புயல் பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகாக்களில் பல்லாயிரக்ணக்கான தென்னை, வாழை, தேக்கு மரங்களை முற்றிலும் அழித்தது. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. கஜா புயலுக்கு பின் போதிய அளவு மழையும் இல்லை. தற்போது இப்பகுதியில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மரம், செடி, கொடிகள் கருகி வருகின்றன. ஏரி, குளங்கள் முற்றிலும் வறண்டு விட்டன. ஆடு, மாடுகள் குடிக்க தண்ணீர் இல்லாமல் அலைந்து திரிகின்றன. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து விட்டது. கிராமங்களில் குடிநீருக்காக பெண்கள் குடத்துடன் வெகுதூரம் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல்லையும், தென்னையையும் நம்பி இருந்த விவசாயிகள் எதிர்காலத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் நிலை தடுமாறி நிற்கின்றனர்.

வறண்ட அணை

பட்டுக்கோட்டை தாலுகா கடைமடை பகுதி பாசனத்துக்காக காட்டாறுகளில் இருந்து கடலில் கலந்து வீணாகும் நீரை தேக்க படுக்கை அணைகள் கட்டப்பட்டன. இதில் ஒன்று பட்டுக்கோட்டை அருகே வெண்டாக்கோட்டையில் நசுவினி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை ஆகும். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அணையின் இருபுறமும் வாய்க்கால்கள் வெட்டப்பட்டு பாசனத்துக்கு பயன்பட்டு வருகிறது. இந்த அணையின் இடது புற வாய்க்கால் 12 கிலோ மீட்டர் நீளம் உள்ளது. தற்போது தண்ணீர் இல்லாமல் நசுவினி ஆறு அணை வறண்டு மைதானமாக காட்சி அளிக்கிறது.

தூர்வார கோரிக்கை

இந்த அணை மூலம் 2,540 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. அணையின் கிளை பகுதியான 6 கிலோ மீட்டர் நீளமுள்ள வலதுபுற வாய்க்கால் மூலம் 1,010 ஏக்கர் நிலம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.

சமீபத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி வடிநில திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து இந்த அணையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன.

தற்போது அணை வறண்டு உள்ளதால் மதுக்கூர் ரோடு நசுவினி ஆற்றுப்பாலத்திலிருந்து இந்த அணை வரை படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்றி தூர் வாரி ஆழப்படுத்தி இருகரைகளையும் உயர்த்தி அதிக அளவு நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story