மீனவர் சேமிப்பு பயனாளிகள் பட்டியலில் பெயர் நீக்கம், மீன்துறை அலுவலகத்தை பெண்கள் முற்றுகை


மீனவர் சேமிப்பு பயனாளிகள் பட்டியலில் பெயர் நீக்கம், மீன்துறை அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 22 May 2019 4:15 AM IST (Updated: 22 May 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தின் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண்கள் மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்,

தமிழகத்தில் நீண்டநெடிய கடற்பரப்பை கொண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதானமாக இருந்து வருகிறது. மீன்பிடி தொழிலை நேரடியாகவும், மறைமுகமாகவும் நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தின் கீழ் பல ஆயிரக்கணக்கான மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் உறுப்பினர்களாக சேர்ந்து நிவாரணம் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் பல ஆண்டுகளாக நிவாரணம் பெற்று வந்த மீனவ பெண்களின் பெயரை திடீரென பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக ராமநாதபுரத்தை அடுத்த கடுக்காய்வலசை, சின்னுடையார்வலசை, சூரங்காட்டுவலசை உள்பட மீனவ கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த ஆண்டுக்கான தங்களுடைய பங்களிப்பு நிதி செலுத்தியும் அவர்களுக்கு நிவாரண தொகை கிடைக்கவில்லை.

இதுகுறித்து மீனவ பெண்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லையாம்.

இதையடுத்து அப்பெண்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது எந்தவித காரணமும் இன்றி தங்களது பெயர் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும், இதனால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் நிதி கிடைக்காமல் சிரமப்பட்டு வருவதாகவும், உடனடியாக தங்களை பட்டியலில் சேர்த்து நிவாரண தொகை வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

இல்லாவிட்டால் மீனவ பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று கூறினர். மீனவ பெண்கள் திரளாக வந்து முற்றுகையிட்டு கோஷமிட்டதால் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story