துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் நினைவு தினம்: தூத்துக்குடியில் ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி


துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் நினைவு தினம்: தூத்துக்குடியில் ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி
x
தினத்தந்தி 23 May 2019 5:15 AM IST (Updated: 23 May 2019 3:36 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் நினைவு தினத்தையொட்டி நேற்று ஏராளமானோர் அவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். அவர்களின் உருவப்படத்தை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் முடிந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலைக்கு எதிராக போராட்டம் தொடங்கிய அ.குமரெட்டியாபுரம் பகுதியில் நேற்று காலையில் கிராமமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். இதில் கிராமமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோல் பண்டாரம்பட்டி, தெற்கு வீரபாண்டியபுரம், சில்வர்புரம், மடத்தூர், மீளவிட்டான், சுப்பிரமணியபுரம் ஆகிய கிராமங்களிலும், தூத்துக்குடி பாத்திமாநகர், தோமையார் காலனி, புதுத்தெரு, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிகளில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ், பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி லயன்ஸ்டவுன் சகாயமாதா ஆலயத்தில், துப்பாக்கி சூட்டில் பலியான சுனோலினுக்கு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. பங்கு தந்தை சகாய லூட்ரின் தலைமை தாங்கினார். முன்னாள் பிஷப் இவோன் அம்புரோஸ் சிறப்பு பிரார்த்தனையை நடத்தினார். இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட சுனோலின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, சுனோலின் தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி அனைவரின் நெஞ்சையும் உருக்கியது.

துப்பாக்கி சூட்டில் இறந்த ஜான்சிராணிக்கு திரேஸ்புரம் குழந்தை தெரசாள் ஆலயத்திலும், கிளாட்சனுக்கு லூர்தம்மாள்புரம் லூர்து அன்னை ஆலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. மாலையில் கூட்டமைப்பினர் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களை அடக்கம் செய்து உள்ள கல்லறைகளுக்கு சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற வேண்டும். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்றும் உறுதிமொழி ஏற்றனர். இதேபோன்று தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாவட்டத்தில் மொத்தம் 30 இடங்களில் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதையொட்டி தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேசுவரன், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் ஆகியோர் மேற்பார்வையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். ஆங்காங்கே போலீசார் சாதாரண உடையிலும் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வெளியூர் ஆட்கள் தூத்துக்குடிக்குள் வருவதை தடுப்பதற்காக முக்கிய சாலைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து வாகன தணிக்கையும் மேற்கொண்டனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, கலெக்டர் அலுவலகம், இந்திய உணவுக்கழக குடோன், பீச் ரோடு, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கலவர தடுப்பு வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வக்கீல் அரிராகவன் வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புன்னக்காயல், மணப்பாடு, கீழவைப்பார், சிப்பிக்குளம், திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் அந்த பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கருப்பு கொடிகள் கட்டப்பட்டு இருந்தன.


Next Story