குமரி மாவட்டத்தில் தேன்–ரப்பர் ஆராய்ச்சிக்கான திட்டங்களை கொண்டு வருவேன் எச்.வசந்தகுமார் பேட்டி


குமரி மாவட்டத்தில் தேன்–ரப்பர் ஆராய்ச்சிக்கான திட்டங்களை கொண்டு வருவேன் எச்.வசந்தகுமார் பேட்டி
x
தினத்தந்தி 23 May 2019 11:00 PM GMT (Updated: 23 May 2019 3:12 PM GMT)

குமரி மாவட்டத்தில் தேன் மற்றும் ரப்பர் ஆராய்ச்சிக்கான திட்டங்களை கொண்டு வருவேன் என்று எச்.வசந்தகுமார் கூறினார்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று நடந்தது. 19 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் எச்.வசந்தகுமார் முன்னிலையில் இருந்தார். அப்போது அவர் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்து பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

நான் சமூக சேவை செய்வேன் என்ற எண்ணத்தில் குமரி மாவட்ட மக்கள் எனக்கு வாக்கு அளித்துள்ளனர். வருங்காலத்தில் மக்களுக்காக பணியாற்றுவது தான் என் கடமை. குமரி மாவட்டத்தில் தேன் மற்றும் ரப்பர் ஆராய்ச்சிக்கான திட்டங்களை கொண்டு வருவேன். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இல்லையே என்ற கவலை எனக்கு இல்லை. ஆனால் வருத்தம் உள்ளது. குமரி மாவட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்கும் நிலையில் தான் நான் இருக்கிறேன். மக்களுக்காக எந்த அமைச்சரையும் சென்று பார்ப்பேன்.


குமரி மாவட்டத்தில் மத்திய அரசின் பணிகள் நடக்கிறது. எனவே அதை முடித்தாக வேண்டும். அதே சமயம் மக்கள் ஒத்துக்கொள்ளும் திட்டங்களை மட்டும் நிறைவேற்ற வேண்டும் என்ற நிலையை மத்திய அரசிடம் எடுத்து சொல்வேன். துறைமுக திட்டத்தை திணிக்க முடியாது. மக்களுக்காக தான் அரசே தவிர, அரசுக்காக மக்கள் இல்லை.

தமிழகம், கேரளா தவிர காங்கிரசுக்கு வேறு எங்கும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்று கூறுகிறீர்கள். நாங்கள் தமிழ்நாட்டு அரசியல் செய்து கொண்டு இருக்கிறோம். இனி தான் அகில இந்திய அரசியல் செய்ய வேண்டும். இதுபற்றி மேலிட தலைவர்களிடம் என்னுடைய கருத்தை தெரிவிப்பேன். ராகுலை மக்கள் புறக்கணிக்கவில்லை. அரசியலில் என்ன நடந்தது? எப்படி தோல்வி கிடைத்தது? என்றெல்லாம் காங்கிரஸ் கமிட்டி ஆராய்ந்து பார்த்து சொல்லும்.


மோடி பிரதமராக இருக்கிறார். நிதின் கட்காரியும் பிரதமர் ஆக தயார் என்று அறிக்கை விடுகிறார். வயதானவர்களை நீக்கும் மத்திய அரசு அவரை நீக்கவில்லை. அதிலும் நிதின் கட்காரி ஆர்.எஸ்.எஸ்.சுடன் இணக்கமாக உள்ளார். எனவே பா.ஜனதா இரண்டாகவோ அல்லது நிதின் கட்காரியை திணிக்கும் நிலையோ வரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story