விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியை அ.தி.மு.க. மீண்டும் கைப்பற்றியது: சின்னப்பன் (அ.தி.மு.க.) -70,139 ஜெயக்குமார் (தி.மு.க.) - 41,585


விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியை அ.தி.மு.க. மீண்டும் கைப்பற்றியது: சின்னப்பன் (அ.தி.மு.க.) -70,139 ஜெயக்குமார் (தி.மு.க.) - 41,585
x
தினத்தந்தி 23 May 2019 11:00 PM GMT (Updated: 23 May 2019 9:21 PM GMT)

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியை அ.தி.மு.க. மீண்டும் கைப்பற்றி உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 18-ந் தேதி நடந்தது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் சின்னப்பன், தி.மு.க. சார்பில் ஜெயக்குமார், அ.ம.மு.க. சார்பில் ஜோதிமணி, மக்கள் நீதிமய்யம் சார்பில் நடராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் காளிதாஸ், சுயேச்சையாக முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஆகியோர் உள்பட 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 8 ஆயிரத்து 833 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த மாதம் 18-ந் தேதி நடந்த தேர்தலில் இந்த தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 821 வாக்குகள் பதிவானது. இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. என்ஜினீயரிங் கல்லூரியில் உள்ள அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் விளாத்திகுளம் தொகுதியில் பதிவான வாக்குகள் நேற்று காலை எண்ணப்பட்டன. வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். வேட்பாளர்களின் முகவர்கள் அதிகாலையிலே வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்ததால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

காலை 8.00 மணிக்கு முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பின்னர் 8.30 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன் முன்னிலை வகித்தார். இவருக்கு அடுத்த படியாக தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமார், சுயேச்சை வேட்பாளர் மார்க்கண்டேயன் ஆகியோர் வந்தனர்.

வாக்குகள் மொத்தம் 19 சுற்றுகளாக எண்ணப்பட்டன. மாலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன் தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமாரை விட 28,554 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி அடைந்தார். இதன்மூலம் இந்த தொகுதியை அ.தி.மு.க. மீண்டும் கைப்பற்றி உள்ளது. அ.ம.மு.க. வேட்பாளர் ஜோதிமணி உள்பட 11 பேர் டெபாசிட் இழந்தனர்.

விளாத்திகுளம் இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

1) சின்னப்பன் (அ.தி.மு.க.)-70,139, 2) ஜெயக்குமார் (தி.மு.க.)-41,585, 3) மார்க்கண்டேயன் (சுயேச்சை)-27,546, 4) ஜோதிமணி (அ.ம.மு.க.)- 9,695,
5) காளிதாஸ் (நாம் தமிழர் கட்சி)- 4,628, 6) நடராஜன் (மக்கள் நீதி மய்யம்)- 1,399, 7) தீபா வாலண்டினா (சுயே.)- 778, 8) ராஜீவ்காந்தி (சுயே.)- 634,
9) முருகானந்தம் (சுயே.)- 527, 10) பொன்ராஜ் (நாம் இந்தியர் கட்சி)- 458, 11) ஹரிஹரன் (சுயே.)- 290, 12) வினோத்குமார் (சுயே)- 249, 13) மாரிமுத்து (சுயே.)- 233, 14) ராஜாமணி (சுயே.)- 218, 15) நோட்டா - 1,386.

தேர்தலில் வெற்றி பெற்ற சின்னப்பனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, அமைச்சர் கடம்பூர் ராஜூ, தேர்தல் பார்வையாளர் மாதவி லதா ஆகியோர் முன்னிலையில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.


Next Story