சேலம் நாடாளுமன்ற தொகுதியை தி.மு.க. கைப்பற்றியது அ.ம.மு.க. வேட்பாளர் உள்பட 20 பேர் டெபாசிட் இழந்தனர்


சேலம் நாடாளுமன்ற தொகுதியை தி.மு.க. கைப்பற்றியது அ.ம.மு.க. வேட்பாளர் உள்பட 20 பேர் டெபாசிட் இழந்தனர்
x
தினத்தந்தி 23 May 2019 10:45 PM GMT (Updated: 23 May 2019 9:28 PM GMT)

அ.தி.மு.க.விடம் இருந்த சேலம் நாடாளுமன்ற தொகுதியை தி.மு.க. கைப்பற்றியது. இதில் அ.ம.மு.க. வேட்பாளர் உள்பட 20 பேர் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

சேலம்,

தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் வேலூர் தவிர்த்து மற்ற 38 தொகுதிகளில் கடந்த மாதம் 18–ந் தேதி தேர்தல் நடைபெற்றது. ஓட்டுப்பதிவு முடிந்த பின்னர் வாக்கு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. சேலம் நாடாளுமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சேலம் கருப்பூர் என்ஜினீயரிங் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தன. அதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் 16 லட்சத்து 11 ஆயிரத்து 982 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 12 லட்சத்து 48 ஆயிரத்து 809 பேர் வாக்களித்து இருந்தனர். இது 77.57 சதவீத வாக்குப்பதிவாகும்.

தொடக்கம் முதலே தி.மு.க. முன்னிலை

இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. சேலம் தொகுதியை பொறுத்தவரை அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.சரவணன், தி.மு.க.வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் உள்பட மொத்தம் 22 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் முன்னிலை வகித்தார்.

அவருக்கு அடுத்த இடத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.சரவணன் ஓட்டுகளை பெற்று இருந்தார். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் அ.ம.மு.க. வேட்பாளர் எஸ்.கே.செல்வம், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரபு மணிகண்டன், நாம் தமிழர் கட்சி வேட்வாளர் ராசா ஆகியோர் பெற்றனர். ஒவ்வொரு சுற்று முடிவிலும் தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் முன்னிலை பெற்று வந்தார்.

தி.மு.க. கைப்பற்றியது

மொத்தம் 26 சுற்றுகள் முடிவில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் 6 லட்சத்து 6 ஆயிரத்து 302 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.சரவணன் 4 லட்சத்து 59 ஆயிரத்து 376 ஓட்டுகள் பெற்றார். இதன் மூலம் 1 லட்சத்து 46 ஆயிரத்து 926 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் அமோக வெற்றி பெற்றதால், அ.தி.மு.க.விடம் இருந்த சேலம் தொகுதியை தி.மு.க. கைப்பற்றியது.

வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம்

மொத்த வாக்காளர்கள்– 16,11,982

பதிவான வாக்குகள்–12,48,809

1. எஸ்.ஆர்.பார்த்திபன் (தி.மு.க.)– 6,06,302

2. கே.ஆர்.எஸ்.சரவணன் (அ.தி.மு.க.)–4,59,376

3. பிரபு மணிகண்டன் (மக்கள் நீதி மய்யம்)– 58,662

4. எஸ்.கே.செல்வம் (அ.ம.மு.க.)– 52,332

5. அ.ராசா (நாம் தமிழர் கட்சி)–33,890

6. சிலம்பரசன் (தமிழ்நாடு இளைஞர் கட்சி)–4,563

7. சிவராமன் (சுயே)– 4,273

8. சடையன் (பகுஜன் சமாஜ் கட்சி)–3,543

9. மணிமாறன் (சுயே)–1,991

10. நடராஜன் (சுயே)–1,679

11. ரவி (சுயே)–1,556

12. மூர்த்தி காமராஜர் (சுயே)–1,465

13. பிரவீனா (சுயே)–1,461

14. அகமது ஷாஜகான் (சுயே)–1,369

15. தமிழரசன் (சுயே)–1,148

16. சுருளிவேல் (சுயே)–1,102

17. மோகன் (சுயே)–777

18. மாதேஸ்வரன் (சுயே)–773

19. கலைமன்னன் (சுயே)–636

20. ஹரிகரன் (சுயே)–541

21. ராஜா (சுயே)–450

22. ராமச்சந்திரன் (சுயே)–440

நோட்டா– 17,130

சான்றிதழ்

இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ரோகிணி வெற்றி பெற்றதற்காக சான்றிதழை வழங்கினார்.

வெற்றிக்கு பின்னர் தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் நிருபர்களிடம் கூறுகையில், இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு மாபெரும் வெற்றி கிடைத்து இருக்கிறது. இனி சேலம் தி.மு.க.வின் கோட்டையாக மாறும். சேலம் மாவட்ட மக்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபடுவேன். மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுப்பேன். தேர்தலில் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதிகூறுகிறேன். எனது வெற்றிக்காக உழைத்த தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார். முன்னதாக அவருக்கு சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் வெற்றி பெற்ற எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story