திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை


திருமணத்திற்கு மறுத்ததால் உல்லாச வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட காதலி : அவமானத்தால் ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 25 May 2019 11:15 PM GMT (Updated: 25 May 2019 9:30 PM GMT)

நஞ்சன்கூடு தாலுகாவில், திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரத்தில் தனியார் நிறுவன ஊழியரின் காதலி ஒருவர் தாங்கள் உல்லாசமாக இருந்த வீடியோக்களை முகநூலில் வெளியிட்டார். இதனால் அவமானம் அடைந்த தனியார் நிறுவன ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மைசூரு, 

போலீஸ் தரப்பில் இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:– மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா மல்லுபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் கிரீஷ்(வயது 24). இவர் மைசூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

அந்த பழக்கம் பின்னர் காதலாக மாறியது. இதையடுத்து கிரீசும், அந்த இளம்பெண்ணும் தீவிரமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் தெரிகிறது. அந்த சந்தர்ப்பத்தில் இருவரும் தங்களுடைய செல்போன்களில் செல்பி வீடியோக்கள், புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் கிரீசுக்கும், அவருடைய காதலிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும், அதனால் அவர் தனது காதலியை திருமணம் செய்ய மறுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் கிரீஷ் தனது காதலியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் முகநூல் உள்பட சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவின.

இதுபற்றி அறிந்த கிரீசின் நண்பர்கள் அவரிடம் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிரீஷ் மனமுடைந்தார். மேலும் அவமானத்தால் மனம் நொந்துபோன அவர் நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்தார்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் விரைந்து வந்து கிரீசை மீட்டு சிகிச்சைக்காக நஞ்சன்கூடுவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மைசூருவில் உள்ள கே.ஆர்.அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிரீஷ் பரிதாபமாக செத்தார்.

இதையடுத்து சம்பவம் குறித்து பிளிகெரே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் கிரீசின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் கே.ஆர். அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கிரீசின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரமடைந்த கிரீசின் காதலி தானும், கிரீசும் உல்லாசமாக இருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதும், அதன் காரணமாக அவமானமடைந்த கிரீஷ் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதையடுத்து கிரீசின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே கிரீசின் காதலி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story