நெல்லை கலெக்டர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை


நெல்லை கலெக்டர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 29 May 2019 10:15 PM GMT (Updated: 29 May 2019 7:41 PM GMT)

தாமிரபரணி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை, 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது வன்னிகோனேந்தல் கிராமம். இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு தாமிரபரணி தண்ணீர் வழங்க வேண்டும் என்று கூறி காலிக்குடங்களுடன் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் ‘நாங்கள் குடிநீர் தேவைக்காக பல முறை கலெக்டர் அலுவலகத்திலும், பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திலும் மனு கொடுத்து உள்ளோம். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது நாங்கள் ஒரு குடம் தண்ணீர் ரூ.5-க்கும், ஒரு பேரல் ரூ.50-க்கும் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். எங்களுக்கு விரைவில் தாமிரபரணி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட ராமையன்பட்டி கிராம பஞ்சாயத்தை சேர்ந்த வேப்பங்குளம், அரசு புதுக்காலனி, சிவாஜிநகர் கிராம மக்கள் 100 நாள் வேலை வழங்கும் திட்டத்தில் நடந்த முறைகேடுகளை கண்டித்து மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் யூனியன் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story