கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா: அமராவதி ஆற்றில் கம்பம் விடும் நிகழ்ச்சி கோலாகலம்


கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா: அமராவதி ஆற்றில் கம்பம் விடும் நிகழ்ச்சி கோலாகலம்
x
தினத்தந்தி 29 May 2019 10:45 PM GMT (Updated: 29 May 2019 7:49 PM GMT)

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அமராவதி ஆற்றில் கம்பம் விடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கரூர்,

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக கரூர் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற தலமாக இருக்கிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத உற்சவ திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. இதையொட்டி கோவில் முன்பு மூன்று கிளையுடைய வேப்பமர கம்பத்தினை நட்டு வைத்து புனிதநீர் ஊற்றி வழிபாடு நடத்துவதும், பின்னர் அந்த கம்பத்தினை ஆற்றுக்கு கொண்டு போய் விடுவதும் சிறப்பு வாய்ந்ததாகும். இதில் கலந்து கொள்ள திரளான பக்தர்கள் கரூருக்கு வருகை தருவதால் கம்பம் விடும் நாளில் கரூர் களை கட்டும்.

அந்த வகையில் இந்த ஆண்டு கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழா கடந்த 12-ந்தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. அன்றைய தினம் கோவில் பரம்பரை அறங்காவலருக்கு அசரீரியாக அம்மன் வாக்கு கூறியதையடுத்து கம்பத்தை தேடி சென்றனர். பின்னர் மூன்று கிளையுடைய வேப்பமர கம்பினை எடுத்து கொண்டு பாலம்மாள்புரத்தில் இருந்து ஊர்வலமாக வந்து கோவிலின் பலிபீடம் எதிரே நட்டு வைத்தனர். பின்னர் கம்பத்திற்கு மஞ்சள் தேய்த்து வேப்பிலையை சூட்டி அலங்கரித்து தினமும் பக்தர்கள் புனித நீரை எடுத்து வந்து குடம் குடமாக ஊற்றி வழிபட்டனர். கடந்த 17-ந்தேதி கரூர் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பூத்தட்டுகளை எடுத்து வந்து அம்மனுக்கு படைத்து பூஜை செய்தனர். பின்னர் 19-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 27-ந்தேதி தேரோட்டமும் நடந்தது. கடந்த 26-ந்தேதி முதல் நேற்று வரை பிரார்த்தனை நாட்களாக கடைப்பிடிக்கப்பட்டன.

அதன்படி கடந்த 26-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், உடலில் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும், மாவிளக்கு எடுத்தும், கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்து வந்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான கம்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்களும் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து மதியம் 1.30 மணி வரை கம்பத்திற்கு புனித நீர் ஊற்ற அனுமதிக்கப்பட்டனர். அதன்பின்னர் கோவிலில் நடை சாத்தப்பட்டன. பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படவில்லை. அதன்பின்னர் கோவிலை சுத்தி சுத்தம் செய்யும் பூஜை நடந்தது. புனித நீர் ஊற்றி கோவிலை சுத்தம் செய்தனர். மாலை 4 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டன. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்து தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் கோவில் பலிபீடம் முன்பு உள்ள கம்பத்தில் வேப்பிலை மற்றும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இதைதொடர்ந்து கம்பத்தை ஆற்றுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. பக்தர்கள் கோவிலின் முன்புற பகுதியில் கம்பத்தை வழியனுப்ப திரண்டு நின்றனர். மாலை 5.15 மணியளவில் அம்மன் சன்னதி எதிரே இருந்த கம்பத்தை பிடுங்கி பூசாரி கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். அப்போது விண்ணதிர மேளதாள வாத்தியங்கள் முழங்கின. கோழிகள் பறக்க விடப்பட்டன. இதைத்தொடர்ந்து கோவிலின் முன்புறம் இருந்த அலங்கரிக்கப்பட்ட ரதத்தினுள் கம்பம் வைக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் மல்லிகைபூவினை அதன் மீது தூவினர். பின்னர் அரிவாளை பிடித்து கொண்டு காவல் தெய்வம் மாவடி ராமசாமி முன்னே செல்ல அதனை தொடர்ந்து கம்பம் பக்தர்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக வந்தது.

அப்போது ஜவகர்பஜார் வீதியில் வழிநெடுகிலும் வாழைப்பழம், மாம்பழம் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து தேங்காய் உடைத்து கம்பத்திற்கு பூஜை செய்தனர். பின்னர் தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பூசாரி ஆசி வழங்கி திருநீறு பூசினார். அப்போது சிலர் அருள் வந்து சாமி ஆடியதையும் காண முடிந்தது. கூட்டம் கட்டுக்கடங்காமல் முண்டி அடித்து வந்ததால் போலீசார் கம்பத்தின் அருகே கயிறு மூலம் தற்காலிக தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கி விடக்கூடாது என்பதற்காக போலீஸ்காரர்கள் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்து கொண்டே வந்தனர்.

மாலை 6.50 மணியளவில் கம்பமானது பசுபதிபாளையம் அமராவதி ஆற்றங்கரையை அடைந்தது. அப்போது ஓம் சக்தி தாயே... பராசக்தி தாயே... என கோஷம் எழுப்பி கம்பத்தை தொட்டு வணங்கினர். போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர் அன்பழகன், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி உள்ளிட்டோர் கோவில் இருந்து நடைபயணமாக கம்பம் விடும் பகுதி வரை வந்து அங்கு அமர்ந்தனர். நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ., நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கோவிலின் அருகே கம்பத்தை தொட்டு வணங்கிவிட்டு சென்றார்.

இதற்கிடையே அங்குள்ள மணல் திட்டில் கம்பம் நடப்பட்டு அதன் மீது மஞ்சள், குங்குமம் தூவி பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து இரவு 7.05 மணியளவில் அங்கு வெட்டி வைக்கப்பட்டிருந்த அகழியில் உள்ள புனிதநீரில் கம்பத்தை விட்டு மூழ்கடித்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் பக்தர்கள் பாட்டிலில் புனிதநீரை பிடித்து சென்றனர். அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தங்களது காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதைத்தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் கம்பம் விடப்பட்ட இடத்தில் பயபக்தியுடன் வணங்கி சென்றனர். கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சியில் கரூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டதால் கரூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

விழாவில் தொழில் அதிபர் பாலாஜி பேப்ரிக்ஸ் பி.சண்முகம், பழனிமுருகன் ஜூவல்லரி உரிமையாளர்கள் என்.சி.சுதர்சனன், என்.எஸ்.பாலமுருகன், பவித்ரம் கே.எம்.பி. மஹால் கே.பி.செந்தில்குமார், அரவிந்த் எலக்ட்ரிக்கல் கே.நகுலப்பன், சரவணா எலக்ட்ரிக்கல் பி.ஏ.தங்கவேல், வள்ளுவர் கல்லூரி தாளாளர் கே.செங்குட்டுவன், கரூர் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, தாந்தோணி கல்யாண வெங்கடரமணசுவாமி கோவில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் ஏ.பி.ராமசாமி, நவமணி கேஸ் எஸ்.பாலகிருஷ்ணன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் கே.சுப்பிரமணியன், ஜெ.தீபா பேரவை மாவட்ட செயலாளர் வி.கே. துரைசாமி, சுப்பண்ணா ஹோட்டல் எஸ்.ரவிச்சந்திரன்.

முன்னாள் நாடாளுமன்ற இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் ஆர்.ஸ்டீபன்பாபு, தாந்தோணி வட்டார முன்னாள் காங்கிரஸ் தலைவர் மூக்கணாங்குறிச்சி எம்.சிவசாமி, சாஸ்தா ஸ்வீட்ஸ் கே.செந்தில்குமார், என்.கே. காட்ஸ் கார்த்திகேயன், ஆண்டாங்கோவில் கீழ்பாகம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரெயின்போ ஆர்.சேகரன், மாவட்ட ஜெ.பேரவை இணை செயலாளர் கே.சி.பரமசிவம், மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், முன்னாள் மாவட்ட பொருளாளர் பேங்க் நடராஜன், கரூர் காந்திகிராமம் நியூ சுமதி உரிமையாளர் ஆர்.குழந்தையப்பன், அண்ணா தொழிற் சங்க செயலாளர் பொரணி கணேசன், கரூர் மணி டிரேடர்ஸ் ஆர்.மணி, கரூர் ஹாலிவுட் மொபைல்ஸ் எம்.சரவணன், அம்சா பிளாஸ்டிக்ஸ் மதியழகன், கரூர் நகர தி.மு.க. ஆர்.எஸ்.ராஜா, ஸ்ரீ டிராவல்ஸ் கே.என்.முருகேசன், செல்வம் கெமிக்கல்ஸ் பி.பெரியசாமி, இன்டல்ஸ் பி.வி.சி.பைப்ஸ் எஸ்.அண்ணாத்துரை, இளைஞர் காங்கிரஸ் கீர்த்தன் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story