கோயம்பேடு பஸ் நிலையத்தில் குமரி இளம்பெண்ணை கடத்தியது விபசார கும்பலா? சென்னை பெண்ணிடம் விசாரணை


கோயம்பேடு பஸ் நிலையத்தில் குமரி இளம்பெண்ணை கடத்தியது விபசார கும்பலா? சென்னை பெண்ணிடம் விசாரணை
x
தினத்தந்தி 30 May 2019 3:45 AM IST (Updated: 30 May 2019 2:48 AM IST)
t-max-icont-min-icon

கோயம்பேடு பஸ் நிலையத்தில் குமரி இளம்பெண்ணை கடத்தியது விபசார கும்பலாக இருக்குமோ என்று தனிப்படை போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த பெண்ணை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருங்கல்,

குமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் பெற்றோரை இழந்த இளம்பெண் ஒருவர் உறவினர் பராமரிப்பில் வசித்து வந்தார். அந்த பெண்ணுக்கு உறவினர்கள் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். அவரை மாப்பிள்ளையாக உறவினர்கள் தேர்வு செய்தனர். பின்னர், அவர்களுக்கு நிச்சயம் முடிந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த இளம்பெண் அந்த வாலிபரை சந்திக்க விரும்பினார். இதற்காக அவர் கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னைக்கு தனியாக சென்றார். கோயம்பேடு பஸ் நிலையத்தில் இறங்கிய அவருக்கு தனக்கு நிச்சயமான வாலிபரின் வீட்டுக்கு எப்படி செல்வது என்று தெரியாததால் தவித்து கொண்டிருந்தார். மேலும், அவரிடம் செல்போன் இல்லாததால் வாலிபரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

குமரி இளம்பெண் தவித்து கொண்டிருப்பதை கண்ட சென்னை பெண் ஒருவர், விவரத்தை கேட்டு உதவுவதாக கூறி, வாலிபரின் செல் நம்பரை வாங்கி தனது செல்போன் மூலம் பேச செய்தார். அப்போது, அந்த வாலிபர் தான் வெளியூருக்கு சவாரிக்காக வந்திருப்பதாகவும், உடனே சென்னை வரமுடியாது என்பதால், இளம்பெண்ணை ஊருக்கு திரும்பி செல்லுமாறு கூறியுள்ளார்.

மறுநாள் அந்த வாலிபர் குமரியில் உள்ள இளம்பெண்ணின் உறவினர்களுக்கு தகவலை கூறினார். அப்போது, இளம்பெண் ஊர் திரும்பாமல் மாயமானது தெரியவந்தது.

இதனால், அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுபற்றி கருங்கல் போலீஸ் நிலையத்திலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனு அளித்தனர். போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், இதுபற்றி விசாரணை நடத்த தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

அதன்படி தனிப்படை போலீசார் விரைந்து சென்று சென்னை போலீசாரின் உதவியை நாடினர். பின்னர், நிச்சயிக்கப்பட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும், இளம்பெண் பேச உதவிய சென்னை பெண்ணின் போன் நம்பரையும் வாங்கினர்.

பின்னர், அந்த பெண்ணை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அந்த பெண் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால், இளம்பெண்ணை கண்டறிவதில் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “பிடிபட்ட சென்னை பெண் முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறார். இதனால், குமரி இளம்பெண்ணை கண்டு பிடிப்பதில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. எனினும் இன்னும் 2 நாட்களுக்குள் இளம்பெண்ணை கண்டுபிடித்துவிடுவோம்“ என்றார்.

இதற்கிடையே போலீசார் பிடியில் உள்ள சென்னை பெண் விபசார கும்பலை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே இளம்பெண்ணை கடத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தி இருப்பார்களோ? என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது. எனவே இளம்பெண்ணை கண்டுபிடிக்கும் முயற்சியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Next Story