கொடைக்கானலில், ஜீப் திருடிய 2 பேர் கைது


கொடைக்கானலில், ஜீப் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 May 2019 10:15 PM GMT (Updated: 29 May 2019 11:08 PM GMT)

கொடைக்கானலில் ஜீப்பை திருடி சென்ற 2 பேர் வாகன சோதனையில் போலீசாரிடம் சிக்கினர்.

கொடைக்கானல், 

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது நண்பர்களுடன் ஜீப்பில் கடந்த மாதம் 24-ந்தேதி கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். அப்போது நாயுடுபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கினார். ஓட்டல் முன்பாக ஜீப்பை நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது அதனை காணவில்லை. இதுகுறித்து கொடைக்கானல் போலீசில் கணேசன் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரன், ஏட்டுகள் சரவணன், ராமகிருஷ்ணன், காசி ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் ஜீப்பை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர். இதனிடையே நேற்று காலை பெருமாள்மலையில் உள்ள சோதனைச் சாவடியில் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகப்படும்படியாக வந்த ஒரு ஜீப்பை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அது கொடைக்கானலில் திருடப்பட்டது என்பது தெரியவந்தது. போலீசாருக்கு தெரியாமல் இருப்பதற்கு வாகன பதிவு எண்ணை மாற்றி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் ஜீப்பை திருடியது தேனி மாவட்டம், போடியை சேர்ந்த வசந்தகுமார் (வயது 30), சின்னமனூரை சேர்ந்த காமாட்சி (40) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கொடைக்கானலில் ஒரு காரை திருடுவதற்கு செல்வதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அந்த ஜீப்பையும் பறிமுதல் செய்தனர்.

Next Story