கஜா புயலில் கட்டிடம் சேதம்: பள்ளி திறந்த முதல் நாளில் ரேஷன் கடை வாசலில் நடந்த வகுப்புகள்


கஜா புயலில் கட்டிடம் சேதம்: பள்ளி திறந்த முதல் நாளில் ரேஷன் கடை வாசலில் நடந்த வகுப்புகள்
x
தினத்தந்தி 3 Jun 2019 10:45 PM GMT (Updated: 3 Jun 2019 6:47 PM GMT)

ஒரத்தநாடு அருகே, கஜா புயலில் சேதம் அடைந்த கட்டிடம் சீரமைக்கப்படாத காரணத்தால் பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளான நேற்று ரேஷன் கடை வாசலில் வகுப்புகள் நடந்தன. உடனடியாக புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு கீழையூர் ஊராட்சிக்கு உட்பட்ட கருவிழிக்காடு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 1967-ம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். இங்கு தற்போது 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இவர்களுக்கு பாடம் கற்பிக்க 2 ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த பள்ளி கட்டிடம் கடந்த ஆண்டு(2018) நவம்பர் மாதம் வீசிய கஜா புயலில் சேதம் அடைந்தது. இதையடுத்து பள்ளியில் படித்த மாணவர்களுக்கு தற்காலிகமாக அதே கிராமத்தில் உள்ள ஒருவருக்கு சொந்தமான வீட்டின் வராண்டாவில் வகுப்புகள் நடத்தப்பட்டன.

ரேஷன் கடை வாசலில் வகுப்புகள்

பள்ளி கட்டிடம் சேதம் அடைந்து 6 மாதங்களாகி விட்டன. ஆனாலும் பள்ளி கட்டிடம் இதுவரை சீரமைக்கப்படவில்லை. மேலும் அந்த கட்டிடம் ஆபத்தான நிலையில் உள்ளது. கோடை விடுமுறை முடிந்த நிலையில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடம் சீரமைக்கப்படாத காரணத்தால் பள்ளி திறந்த முதல் நாளான நேற்று மாணவர்களுக்கு அதே பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையின் வாசலில் வகுப்புகள் நடத்தப்பட்டன.

புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கை

எனவே சேதம் அடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டிடத்தை உடனடியாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருவிழிக்காடு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story