கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வினியோகம்


கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வினியோகம்
x
தினத்தந்தி 3 Jun 2019 11:00 PM GMT (Updated: 3 Jun 2019 8:47 PM GMT)

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன.

திருச்சி,

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதியுடன் கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்தவுடன் ஜூன் 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி திறப்பு தேதி தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் திட்டமிட்டபடி 3-ந் தேதி(நேற்று) பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால் வெளியூர் சென்றிருந்தவர்கள், சுற்றுலா சென்றவர்கள் பலர் தங்களது இருப்பிடத்திற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பே திரும்ப தொடங்கினர்.

பள்ளிகள் திறப்பையொட்டி மாணவ-மாணவிகள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து, இறை வழிபாடு நடத்தி பள்ளிக்கு புறப்பட்டனர். பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை வாழ்த்தி அனுப்பி வைத்தனர். சில பெற்றோர் தாங்களே மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து பள்ளியில் நேரடியாக விட்டு சென்றனர். மாணவ-மாணவிகள் பள்ளிக்கு ஆர்வமுடன் வந்தனர்.

புதிய புத்தக பைகள், நோட்டுகள், எழுதுபொருட்களுடன் உற்சாகமாய் வகுப்பறைகளுக்குள் சென்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டன. மாணவ-மாணவிகள் அதனை ஆர்வமுடன் பெற்று கொண்டனர்.

திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு பள்ளியில் முதல் பருவத்திற்கான தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்களை வட்டார கல்வி அதிகாரி அருள்தாஸ்நேவிஸ் மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்.

அங்கன்வாடி மையங்கள் இருந்த நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 80 பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப் பட்டுள்ளது. முதன்முதலாக பள்ளியில் சேர்ந்த சில குழந்தைகள் பெற்றோரை விட்டு பிரிந்து செல்ல மறுத்து அழுதன. அந்த குழந்தைகளை பெற்றோர் அரவணைத்து சமாதானப்படுத்தி பள்ளியில் விட்டனர். ஆசிரியர்களும் அந்த குழந்தைகளை அன்போடு வரவேற்று வகுப்பறையில் அமர வைத்ததை காண முடிந்தது.

பல நாட்கள் விடுமுறைக்கு பின் வகுப்பறையில் ஒன்றாக சந்தித்த மாணவ-மாணவிகள் ஒருவருக்கொருவர் கைகொடுத்து வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். வெளியூரில் இருந்து வந்து விடுதியில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகள் தங்களது உடைமைகளை எடுத்து வந்திருந்தனர். அவர்களை விடுதியில் பெற்றோர் சேர்த்து சென்றனர். திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பறை இசை மூலம் மாணவர்களுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேலும் மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் மணிகண்டம் வட்டார கல்வி அதிகாரி மருதநாயகம் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு விதை பென்சில்கள் வழங்கப்பட்டன.

இந்த கல்விஆண்டில் 2, 3, 4, 5, 7, 8 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்களாகும். இதேபோல 9-ம் வகுப்பிற்கு முப்பருவ தேர்வு பாட முறை மாற்றி ஒரே தேர்வு என்ற முறையில் பாடப்புத்தகங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை மட்டும் முப்பருவ தேர்வு முறையில் வகுப்புகள் நடைபெறும். 1, 6, பிளஸ்-1 வகுப்பிற்கு கடந்த கல்வி ஆண்டிலேயே புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். இதேபோல திருச்சி கல்வி மாவட்ட அதிகாரி சின்னராஜ் மற்றும் அந்தந்த கல்வி மாவட்ட அதிகாரிகள் தங்களது எல்லைக்குட்பட்ட பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதா? என்பதை பார்வையிட்டனர். விலையில்லா சீருடை இன்னும் வந்து சேராததால் அவை மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படவில்லை. இதேபோல புதிய பாடத்திட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பில் கணக்கு, சமூக அறிவியல் பாடப்புத்தகங்களும், 8-ம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய பாடப்புத்தகங்களும் பல பள்ளிகளுக்கு இன்னும் வந்து சேரவில்லை என பள்ளிக்கல்வி துறை வட்டாரத்தில் தெரிவித்தனர். 

Next Story