கோபி அருகே பூப்பறிக்க சென்ற பெண் மின்சாரம் தாக்கி சாவு


கோபி அருகே பூப்பறிக்க சென்ற பெண் மின்சாரம் தாக்கி சாவு
x
தினத்தந்தி 4 Jun 2019 4:15 AM IST (Updated: 4 Jun 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே பூப்பறிக்க சென்ற பெண் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கீழ்வாணி அம்மன் கோவில் என்ற இடத்தை சேர்ந்தவர் பகவதி. இவர் இறந்துவிட்டார். அவருடைய மனைவி பாக்கியலட்சுமி (வயது 60).

இவர்களுக்கு தீனதயாளன், தங்கவேல், நல்லதம்பி ஆகிய 3 மகன்களும், தமிழரசி என்ற மகளும் உள்ளனர். இதில் தீனதயாளன் வீட்டில் பாக்கியலட்சுமி குடியிருந்து வந்தார்.

பாக்கியலட்சுமி மகன்வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்தார். தினமும் காலை 5.30 மணி அளவில் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து செடியில் பூக்களை பறித்துவிட்டு செல்வது வழக்கம்.

அதேபோல் அவர் நேற்று காலை பூக்களை பறிப்பதற்காக பையுடன் இறங்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மாடியில் துணியை காய வைப்பதற்காக போடப்பட்ட கம்பியில் மின்சாரம் பாய்ந்துள்ளது. அந்த கம்பி எதிர்பாராதவிதமாக பாக்கியலட்சுமி மீது உரசியது.

இதனால் அவரை மின்சாரம் தாக்கியது. இதில் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்த தீனதயாளன் உடனே கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாக்கியலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story