மது குடிக்க பணம் கேட்டு தாயிடம் தகராறு செய்த வாலிபர் கல்லால் தாக்கி கொலை அண்ணன் கைது


மது குடிக்க பணம் கேட்டு தாயிடம் தகராறு செய்த வாலிபர் கல்லால் தாக்கி கொலை அண்ணன் கைது
x
தினத்தந்தி 4 Jun 2019 11:15 PM GMT (Updated: 4 Jun 2019 8:26 PM GMT)

கரூர் அருகே மது குடிக்க பணம் கேட்டு தாயிடம் தகராறு செய்த தம்பியை கல்லால் தாக்கி கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

கரூர்,

கரூர் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நத்தமேடு சோழியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அம்சவள்ளி (வயது 42). இவர் பூ கட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன்கள் நந்தகுமார் (20), கவுதம் (19). டிரைவரான நந்தகுமாருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். கவுதம் டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கவுதம் அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதை அவரது தாய் கண்டித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கவுதம் வழக்கம் போல் தனது தாயிடம் மது குடிக்க பணம் கேட்டார். அதற்கு அவர் பணம் தரமறுக்கவே, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கவுதம் அம்சவள்ளியை தாக்கினார்.

இதைத்தொடர்ந்து கவுதம் அப்பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்று விட்டார். இதற்கிடையில் நடந்த சம்பவம் குறித்து அம்சவள்ளி மூத்த மகன் நந்தகுமாரிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நந்தகுமார் பாட்டி வீட்டுக்கு சென்று அங்கு இருந்த கவுதமிடம், தாயை தாக்கியது குறித்து கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. அப்போது நந்தகுமார் தனது தம்பியை பிடித்து கீழே தள்ளினார். பின்னர் அங்கு கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் தாக்கினார். இதில் கவுதம் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கவுதமை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் வாங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கவுதமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா வழக்குப்பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்தார்.

Next Story