சேலத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வருகை: 7-ந் தேதி மேம்பாலத்தை திறந்து வைக்கிறார்


சேலத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வருகை: 7-ந் தேதி மேம்பாலத்தை திறந்து வைக்கிறார்
x
தினத்தந்தி 4 Jun 2019 11:30 PM GMT (Updated: 4 Jun 2019 10:45 PM GMT)

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்துக்கு நாளை (புதன்கிழமை) வருகிறார். சேலத்தில் ஏ.வி.ஆர். ரவுண்டானா-அஸ்தம்பட்டி மேம்பாலத்தை 7-ந் தேதி திறந்து வைக்கிறார்.

சேலம்,

சேலம் மாநகரில் ேபாக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு ரூ.320 கோடி ஒதுக்கீடு செய்து இரண்டடுக்கு உயர்மட்ட மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டினார். 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இருதளங்களுடன் கட்டப்படும் இந்த மேம்பாலத்தின் முதல்தள கட்டுமான பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து உள்ளன.

இதில் ஏ.வி.ஆர். ரவுண்டானாவில் இருந்து அஸ்தம்பட்டி வரையிலான மேம்பால பணிகள் முடிவடைந்துள்ளன. இதை தவிர அஸ்தம்பட்டியில் இருந்து அழகாபுரம் போலீஸ் நிலையம் வரையிலான மேம்பால பணிகளும் நிறைவடைந்துள்ளன.

குரங்குச்சாவடியில் இருந்து அண்ணா பூங்கா வரையிலான மேம்பால பணிகளும், அண்ணா பூங்காவில் இருந்து ஏ.வி.ஆர். ரவுண்டானா வரையிலான மேம்பால பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏ.வி.ஆர். ரவுண்டானா முதல் அஸ்தம்பட்டி வரையிலான மேம்பாலம் மற்றும் அஸ்தம்பட்டியில் இருந்து அழகாபுரம் போலீஸ் நிலையம் அருகே வரையிலான (சாரதா கல்லூரி சாலை) மேம்பாலத்தின் மேற்பகுதியில் தார்சாலை போடப்பட்டு மின்விளக்குகள் அமைக்கும் பணிகள், வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பாலம் வருகிற 7-ந் தேதி திறக்கப்படுகிறது. இதற்கான திறப்பு விழாவில் பங்கேற்கும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (வியாழக்கிழமை) சேலத்துக்கு வருகிறார். 7-ந் தேதி நடைபெறும் விழாவில் பங்கேற்று பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் அவர் மறுநாள் சென்னை செல்ல உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த பாலம் பயன்பாட்டிற்கு வரும்போது அஸ்தம்பட்டியில் இருந்து 5 ரோடு வழியாக செல்லும் வாகனங்கள் பாலத்தின் மீது ஏறி ஏ.வி.ஆர். ரவுண்டானா வரை செல்லலாம். அதே நேரத்தில் அழகாபுரம் போலீஸ் நிலையம் அருகே இறங்கி கொள்ளும் வசதியும் உள்ளது. இதனால் சாரதா கல்லூரி சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும். வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படாது என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story