விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி மறியல் செய்த மாணவ, மாணவிகள் மீது போலீஸ் தடியடி
விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி மதுரையில் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
மதுரை,
மதுரை மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு பிளஸ்-2 முடித்த மாணவ- மாணவிகள் சிலருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட வில்லை. அந்த மாணவர்கள் தங்களுக்கு மடிக்கணினி வழங்கக்கோரி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கடந்த வாரம் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து விட்டு, கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். ஆனால் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்பட வில்லை.
இந்த நிலையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் முன்பு மறியல் நடத்த திட்டமிட்டனர். அதற்காக நேற்று அவர்கள் அங்கு ஒன்று திரண்டனர்.
மாணவர்கள் அங்கு கூடுவதை அறிந்த போலீசார், அனைவரும் கலைந்து செல்லுங்கள். இங்கு எந்தவித போராட்டமும் நடத்த கூடாது என்று எச்சரித்தனர். ஆனால் எச்சரிக்கையையும் மீறி, மாணவர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பலத்த போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
போலீசார், அவர்களை கலைந்து செல்லுமாறு மீண்டும் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் மாணவர்கள் தங்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கினால் தான் கலைந்து செல்வோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
போலீசார் தொடர்ந்து அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். நிலைமை மோசமானதை தொடர்ந்து போலீசார் அவர்களை கடுமையாக எச்சரிக்க தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனவே போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். அதன்பின் மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story