பாளையங்கோட்டையில் பயங்கரம்: தனியார் ஆஸ்பத்திரி காவலாளி சரமாரி வெட்டிக்கொலை உறவினர்கள் சாலைமறியல்–பரபரப்பு


பாளையங்கோட்டையில் பயங்கரம்: தனியார் ஆஸ்பத்திரி காவலாளி சரமாரி வெட்டிக்கொலை  உறவினர்கள் சாலைமறியல்–பரபரப்பு
x
தினத்தந்தி 6 July 2019 4:30 AM IST (Updated: 5 July 2019 6:30 PM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் தனியார் ஆஸ்பத்திரி காவலாளி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை,

பாளையங்கோட்டையில் தனியார் ஆஸ்பத்திரி காவலாளி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காவலாளி

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள பக்கப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் கண்ணன் (வயது 54). இவருடைய மனைவி மாரியம்மாள் (48). இவர்களுடைய மகள் பார்வதி (18). இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 2–ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் பெருமாள் கண்ணன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் எதிரே உள்ள சுப்பிரமணியபுரம் தெருவில் குடியேறினார். இங்கு அவர் சமாதானபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

வெட்டிக்கொலை

இவர் தினமும் காலை 7 மணியளவில் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். அதேபோல் நேற்று காலை பெருமாள் கண்ணன் வேலைக்கு புறப்பட்டு சென்றார். வ.உ.சி. மைதானத்துக்கு எதிரே உள்ள ஒரு தெரு வழியாக சென்றபோது, அவரை ஒரு கும்பல் வழிமறித்தது. பின்னர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் கீழே சரிந்து விழுந்த அவரை மேலும் வெட்டிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.

இதில் பெருமாள் கண்ணன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற சில நமிடங்களிலேயே பெருமாள் கண்ணன் படுகொலை செய்யப்பட்ட தகவல், அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. உடனே மனைவி மாரியம்மாள், மகள் பார்வதி மற்றும் உறவினர்கள் அங்கு வந்து, அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீஸ் உதவி கமி‌ஷனர் கோடிலிங்கம், இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பெருமாள் கண்ணன் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் ‘பரணி‘ வரவழைக்கப்பட்டது. அந்த நாய் கொலையாளிகள் ஓட்டம் பிடித்த தெருக்கள் வழியாக சுற்றி வந்து நின்றது. ஆனால், யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதையடுத்து பெருமாள் கண்ணன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?

இந்த கொலை குறித்து விசாரணை நடத்துவதற்காக போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த முத்துசாமி மற்றும் அவருடைய பேரன் சுடலைமணி (18) ஆகிய இருவரும் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் குளிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த இரட்டைக்கொலை நடந்தது.

இந்த சம்பவத்துக்கு பிறகு 2 பிரிவினருக்கு இடையே ஒருவரையொருவர் பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டு வந்துள்ளனர். எனவே, திட்டமிட்டு பெருமாள் கண்ணனை கொலை செய்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனடிப்படையில் பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று தெரிவித்தனர். மேலும் பெருமாள் கண்ணனை ஏற்கனவே 2 முறை விபத்து மூலம் கொலை செய்ய முயற்சிகள் நடந்ததாகவும், இதனால் அவரது குடும்பம் பாளையங்கோட்டைக்கு குடிபெயர்ந்ததும் தெரியவந்தது.

கண்காணிப்பு கேமரா காட்சி

இந்த பயங்கர கொலை நடந்த இடம் எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். இதையொட்டி அந்த பகுதியில் சிலரது வீடுகளிலும், அலுவலகங்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வைத்துள்ளனர். இந்த கேமராக்களில் கொலையாளிகள் வந்து சென்ற காட்சிகள் பதிவாகி உள்ளதா? என்று கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

உறவினர்கள் சாலை மறியல்

இதற்கிடையே, பெருமாள் கண்ணன் கொலை செய்யப்பட்ட தகவல் அவரது சொந்த ஊரான பக்கப்பட்டி கிராம மக்களுக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு, பெருமாள் கண்ணன் உடல் வைக்கப்பட்டுள்ள ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு ஆஸ்பத்திரி நுழைவு வாசல் முன்பு உள்ள மெயின் ரோட்டில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் (சட்டம்–ஒழுங்கு) சாம்சன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், ‘பெருமாள் கண்ணன் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவருடைய மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம். மேலும் இன்று (சனிக்கிழமை) முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து தென்காசிக்கு செல்லும் ரோட்டையொட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம். பக்கப்பட்டி கிராமத்தில் உள்ளிருப்பு போராட்டமும் நடத்துவோம்‘ என்று கூறினர்.

பரபரப்பு

போலீசார் சமரசம் செய்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனால் குற்றவாளிகளை கைது செய்யும் வரை பெருமாள் கண்ணன் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி விட்டனர்.

இந்த சம்பவத்தால் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.


Next Story