திண்டிவனத்தில் பெண்ணிடம் நகை, பணம் அபேஸ் போலீஸ் விசாரணை


திண்டிவனத்தில் பெண்ணிடம் நகை, பணம் அபேஸ் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 7 July 2019 4:00 AM IST (Updated: 6 July 2019 10:50 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் பெண்ணிடம் நகை, பணத்தை மர்ம மனிதர்கள் அபேஸ் செய்து சென்றுவிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டிவனம், 

திண்டிவனம் அடுத்த பெலாக்குப்பத்தை சேர்ந்தவர் மதன். இவரது மனைவி அஞ்சலி தேவி(வயது 25). இவர் நேற்று காலை செஞ்சியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக, கை குழந்தையுடன், உறவினரின் ஆட்டோவில் திண்டிவனத்தில் செஞ்சி செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் வந்து இறங்கினார்.

அப்போது, அவரிடம் அங்கு நின்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் பேச்சுக்கொடுத்தார். இதையடுத்து அவரிடம் அஞ்சலி தேவி பேசியபடி இருந்தார். சிறிது நேரத்தில் அவரது பையை பார்த்த போது, அடிப்பகுதியில் கிழிந்த நிலையில் இருந்தது. மேலும் பையில் இருந்த செல்போன், ஏ.டி.எம்.கார்டு, ஒரு கிராம் தங்க மோதிரம், ரூ. 1,900 ஆகியவற்றை காணவில்லை. மர்ம மனிதர்கள் அவரது பையை பிளேடால் அறுத்து பொருட்களை அபேஸ் செய்து சென்று இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அஞ்சலி தேவி, நடந்த சம்பவம் குறித்து திண்டிவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி அதன் மூலமாக விசாரணை நடத்தி, மர்ம மனிதர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story