ஆவுடையார்கோவிலில் ஆத்மநாதசுவாமி கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்


ஆவுடையார்கோவிலில் ஆத்மநாதசுவாமி கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்
x
தினத்தந்தி 6 July 2019 10:30 PM GMT (Updated: 6 July 2019 7:43 PM GMT)

ஆவுடையார் கோவில் ஆத்மநாதசுவாமி கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ஆவுடையார்கோவில்,

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலில் ஆத்மநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா மாணிக்கவாசகருக்கு தான் நடைபெறுகிறது. திருவிழா தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு நாளும் மாணிக்கவாசகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து காலை, மாலை இருவேளையும் மாணிக்கவாசகர் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி மாணிக்கவாசகருக்கு மஞ்சள், சந்தனம், களபம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தேரோட்டம்

இதைதொடர்ந்து மாணிக்கவாசகர் காலை 10.45 மணிக்கு திருத்தேருக்கு எழுந்தருளினார். பின்னர் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மேள, தாளம் முழங்க தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர் கள் ஆத்மநாதா... மாணிக்கவாசகா என்ற மந்திரங்களை சொல்லியபடி தேரை இழுத்தனர். தேர் நான்கு வீதிகளில் அசைந்து ஆடிவந்தது. ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் திரண்டிருந்து மாணிக்கவாசகருக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் கோவில் நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தில் பொதுமக்கள் மற்றும் ஆன்மிக சான்றோர்கள் நீர் மோர் மற்றும் அன்னதானம் வழங்கினர்.

திரளான பக்தர்கள்

தேரோட்டத்தில் மதுரை இளையமடாதிபதி ஞானசம்பந்த தேசிக பரமாசாரியார் சுவாமி, திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பில் முத்துக்குமரன், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜநாயகம், வர்த்தக சங்கத்தினர், திருப்பணி கமிட்டியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா மற்றும் ஆவுடையார்கோவில் போலீசார் செய்திருந்தனர். தேரோட்டத்தை தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெள்ளிரதத்தில் மாணிக்கவாசகர் வீதி உலா நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆத்மநாதசுவாமி கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். 

Next Story