பெரம்பலூர் நகராட்சியில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கும் பொதுமக்களுக்கு பரிசு ஆணையர் அறிவிப்பு


பெரம்பலூர் நகராட்சியில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கும் பொதுமக்களுக்கு பரிசு ஆணையர் அறிவிப்பு
x
தினத்தந்தி 7 July 2019 10:15 PM GMT (Updated: 7 July 2019 7:50 PM GMT)

பெரம்பலூர் நகராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கும் பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் நகராட்சி பகுதியை தூய்மையாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து நகராட்சி பணியாளர்களிடம் கொடுத்து வருகிறார்கள். மேலும் மக்கும் குப்பைகளை தனது வீட்டுத்தோட்டத்தில் பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செயல்படும் பொதுமக்களுக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆகியோர் அறிவுரையின்படி சிறப்பாக செயல்படும் பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையிலும், கவுரவிக்கும் வகையிலும் பரிசும், பாராட்டு சான்றிதழ் வழங்க அறிவுறுத்தி உள்ளார்கள். அதன்படி, அனைத்து வசதிகளையும் கொண்ட மாதிரி வார்டாக 5 வார்டுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பரிசு

அவ்வார்டுகளில் தினசரி குப்பை சேகரம் செய்யவும், வடிகால்களை சுத்தம் செய்யவும், குப்பையில்லா வார்டாக உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கொடுத்தும், மக்கும் குப்பைகளை தாமாக வீட்டு தோட்டங்களில் பயன்படுத்திக்கொள்வோர்களை இந்நகராட்சி பணியாளர்கள் நேரில் பார்வையிட்டு சிறப்பாக செயல்படும் வீடுகளுக்கு கலெக்டர் தலைமையில் பரிசுகள் கொடுத்து கவுரவிக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. எனவே பெரம்பலூர் நகராட்சியை அனைவரும் தூய்மையானதாகவும், மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஏற்ற நகரமாக உருவாக்கிட அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story