ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து தஞ்சை பெரியகோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து தஞ்சை பெரியகோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 7 Aug 2019 4:30 AM IST (Updated: 7 Aug 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தஞ்சை பெரியகோவில் மற்றும் பா.ஜ.க. அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் கூடும் இடம், கோவில்கள், பா.ஜ.க., இந்து அமைப்புகளின் அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தஞ்சை பெரியகோவிலில் வழக்கமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். ஆனால் நேற்று முன்தினம் முதல் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் மோப்பநாய் சீசர் வரவழைக்கப்பட்டு கோவிலின் அனைத்து பகுதிகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதே போல் தஞ்சை பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், அரண்மனை உள்ளிட்ட இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போலீஸ் குவிப்பு

தஞ்சையில் உள்ள பா.ஜ.க. அலுவலகங்கள், ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மற்றும் இந்து அமைப்பின் அலுவலகங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தஞ்சை ரெயில் நிலையத்திலும் வழக்கத்தை விட போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெயில் ஏற வரும் பயணிகளின் உடைமைகளும் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன.

இதே போல் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் கோவில்கள், பஸ் நிலையம், ரெயில் நிலையம், மற்றும் பா.ஜ.க. அலுவலகங்கள், இந்த அமைப்புகளின் அலுவலகங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story