புதுக்கோட்டை அருகே, பள்ளி ஆசிரியையிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு - மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம வாலிபர்கள் துணிகரம்


புதுக்கோட்டை அருகே, பள்ளி ஆசிரியையிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு - மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம வாலிபர்கள் துணிகரம்
x
தினத்தந்தி 6 Aug 2019 10:00 PM GMT (Updated: 6 Aug 2019 10:37 PM GMT)

புதுக்கோட்டை அருகே பள்ளி ஆசிரியையிடம் 4 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம வாலிபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி,

புதுக்கோட்டை அருகே உள்ள முடிவைத்தானேந்தலை சேர்ந்தவர் சுப்பையா. இவர் தாளமுத்துநகரில் உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பிரவைசராக உள்ளார். இவருடைய மனைவி பிரியா ராமலட்சுமி (வயது 33). இவர் புதுபட்டியில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் மகன்கள் 2 பேரையும் இந்தி தேர்வுக்காக கணவன், மனைவி 2 பேரும் 2 மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கு இருந்து மாதா கோவிலுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பினர்.

முதலில் பிரியா ராமலட்சுமி ஒரு மோட்டார் சைக்கிளில் தனது மகனுடன் சென்றார். அவருக்கு பின்னால் சற்றுதொலைவில் சுப்பையா மற்றொரு மகனுடன் வந்தார். பிரியா ராமலட்சுமி சென்ற மோட்டார் சைக்கிள், புதுக்கோட்டை அருகே ராஜீவ்நகர் இசக்கியம்மன் கோவில் அருகே சென்று கொண்டுஇருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 வாலிபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் பிரியா ராமலட்சுமி கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு சென்றனர்.

இதில் அவர் நிலைதடுமாறினாலும், சுதாரித்து கொண்டு மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் சத்தம் போட்டவாறு மர்ம வாலிபர்கள் சென்ற மோட்டார் சைக்கிளை துரத்தி சென்றார். ஆனால் அந்த மர்ம வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தி தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து பிரியா ராமலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம வாலிபர்களை தேடிவருகின்றனர்.

Next Story