நாகர்கோவிலில் துணிகரம், எல்.ஐ.சி. அதிகாரி வீட்டில் 22 பவுன் நகை கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


நாகர்கோவிலில் துணிகரம், எல்.ஐ.சி. அதிகாரி வீட்டில் 22 பவுன் நகை கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Aug 2019 11:00 PM GMT (Updated: 9 Aug 2019 8:38 PM GMT)

நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. அதிகாரியின் வீட்டில் 22 பவுன் நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நாகர்கோவில்,


நாகர்கோவில் பள்ளிவிளை சி.எம்.தெருவை சேர்ந்தவர் வல்சலம் (வயது 67), ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. அதிகாரி. இவரது மனைவி சொர்ணபாய். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் திருமணமாகி வெளிநாட்டில் வசித்து வருகிறார். மற்றொரு மகன் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை வல்சலம் மார்த்தாண்டத்தில் ஒரு துக்க வீட்டுக்கு சென்றிருந்தார். அதே சமயத்தில், சொர்ணபாய் மயிலாடியில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வல்சலம் வீட்டின் முன்கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 22 பவுன் தங்க நகைகளையும், ரூ.56 ஆயிரம் ரொக்கத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.

இதற்கிடையே வீட்டுக்கு வந்த வல்சலம், வீட்டில் கொள்ளை போனதை கண்டு திடுக்கிட்டார். உடனே இதுகுறித்து வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கொள்ளை நடந்த வீட்டுக்கு நாகர்கோவில் உதவி சூப்பிரண்டு ஜவகர், இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் சேகரிக்கப்பட்டன. பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story