ரூ.135 கோடியில் உயர்மட்ட மேம்பாலப்பணிகள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி


ரூ.135 கோடியில் உயர்மட்ட மேம்பாலப்பணிகள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 11 Aug 2019 11:00 PM GMT (Updated: 11 Aug 2019 8:23 PM GMT)

ரூ.135 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் நடந்து வருவதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.

கரூர்,

கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆத்துார் பூலாம்பாளையம் ஊராட்சியில் வீரசோளிபாளையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலும், நன்னியூர் துவரபாளையம் ஆதிதிராவிடர் காலணி பகுதியில் ரூ.14 லட்சம் மதிப்பிலும், கடம்பங்குறிச்சி பண்டுகதாரன்புதுார் பகுதியில் ரூ.11லட்சம் மதிப்பிலும் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாயக்கூட கட்டடங்களையும், மண்மங்கலத்தில் அண்ணாநகர் பகுதியில் ரூ.7.5லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தையும் நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். மேலும், நெரூர் வடக்கு ஊராட்சியில் ஒத்தக்கடை பகுதியில் ரூ.4 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலான தானியக்களம் அமைப்பதற்கான பூமிபூை-ஐயிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து சோமூர் ஊராட்சியில் திருமுக்கூடலுார் பகுதியில் ரூ.14 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் ஜல் சக்தி அபியான் நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டப் பணியாளர்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

நெரூர்-உன்னியூரிடையே பாலப்பணி

இது தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியாதாவது:- கரூர் மாவட்டத்தின் நெரூர் பகுதியையும், திருச்சி மாவட்டத்தின் உன்னியூர் பகுதியையும் இணைக்கும் வகையில் ரூ.135 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. ரெயில்வே இருப்புப் பாதையை கடக்க இயலாமல் நீண்டதூரம் பயணம் செய்யும் வகையில் இருந்த நிலையை மாற்றி எளிதில் மக்கள் பயணம் செய்யும் வகையில் பசுபதி பாளையம் மற்றும் குளத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் ரூ.13 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் குகைவழிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற திட்டங்களையெல்லாம் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

விழிப்புணர்வு

தற்போதைய வறட்சியான சூழலில் மழைநீர் சேகரிப்பு குறித்தும், மரம் வளர்ப்பு குறித்தும் பொதுமக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நம்மால் இயன்ற அளவில் மழைநீரை சேமித்து, மரங்களை வளர்த்தால் மட்டுமே நம் எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதன் அடிப்படையில்தான் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எண்ணற்ற மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கவிதா, மண்மங்கலம் வட்டாட்சியர் ரவிச்சந்திரன், கரூர் வட்டார வளர்ச்சி அதிகாரி விஜயலெட்சுமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கதலைவர் திருவிகா, ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Next Story