மணப்பாறை அருகே மகாலட்சுமி கோவில் திருவிழா: தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்


மணப்பாறை அருகே மகாலட்சுமி கோவில் திருவிழா: தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 13 Aug 2019 10:30 PM GMT (Updated: 13 Aug 2019 5:22 PM GMT)

மணப்பாறை அருகே மகாலட்சுமி கோவில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டியில் குரும்பர் இன மக்களின் பொது தெய்வங்களான சென்னப்பசாமி, மகாலட்சுமி, பீரேஷ்வரசாமி, அகோர வீரபத்திரசுவாமி, ஏழு கன்னிமார், பாப்பாத்தியம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் அடங்கிய கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி 28-ந்தேதி திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 1-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சாமி அலங்கார வாகனத்தில் பூஞ்சோலை சென்றது. அங்கு கரகம் அலங்கரிக்கப்பட்டு சக்தி அழைத்து, சக்தி தேங்காய் உடைத்து, திருஷ்டி குட்டி வெட்டி கோவில் வந்தடைந்தது.

தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

இதைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடன்களுக்காக தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியும், பெண்கள் சாட்டையடி வாங்கும் நிகழ்ச்சியும் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி நேற்று பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கோவில் முன்பு நேர்த்திக்கடன் செலுத்த, அமர்ந்திருந்த பக்தர்களின் தலையில் பூசாரி தேங்காய் உடைத்தார்.

அதன்பின்னர் நடைபெற்ற பூஜையின் போது பெண்கள் சாட்டையடி வாங்கிக் கொண்டனர். இதைத்தொடர்ந்து பொங்கல் வைத்து படையலிடும் நிகழ்ச்சியும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. இந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து நேற்று மாலை கரகம் பூஞ்சோலை அடையும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Next Story