இலந்தைகூடம், கல்லாத்தூரில் திரவுபதியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்


இலந்தைகூடம், கல்லாத்தூரில் திரவுபதியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 13 Aug 2019 10:30 PM GMT (Updated: 13 Aug 2019 5:26 PM GMT)

இலந்தைகூடம், கல்லாத்தூரில் உள்ள திரவுபதியம்மன் கோவில்களில் நடைபெற்ற திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இலந்தைகூடம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதில் கடந்த 11-ந் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பட்டு உடுத்தி அலங்காரம் செய்யப்பட்டது.தொடர்ந்து மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு வேண்டியிருந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்திக்கொண்டும், கரகம் ஏந்தியும், அவர்களது குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டும் ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த அக்னிகுண்டத்தில் இறங்கி நடந்து சென்று நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

நேர்த்திக்கடன் செலுத்தினர்

ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூரில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான தீமிதி திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி பூங்கரகம், தவசுமரம் ஏறுதல், பூ எடுத்தல், அரவான்கடபலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தினமும் மகாபாரத கதைகள் கூறப்பட்டு, அம்மன் வீதிஉலா நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் தீ மூட்டபட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் மேலூர், தண்டலை, புதுக்குடி, மருக்காலங்குறிச்சி, விழப்பள்ளம், ஏரவாங்குடி மற்றும் அருகில் உள்ள பல்வேறு கிராம மக்கள் திரளான கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் வீடுகள்தோறும் மா விளக்கு போட்டும், தேங்காய் உடைத்து தீபாராதனை காண்பித்தும் அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் நாட்டாண்மைகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story