வெள்ளானூர் கன்னிமார் அம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்


வெள்ளானூர் கன்னிமார் அம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 14 Aug 2019 10:30 PM GMT (Updated: 14 Aug 2019 5:50 PM GMT)

வெள்ளானூர் கன்னிமார் அம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தரகம்பட்டி,

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே வெள்ளானூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கன்னிமார் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மதுரைவீரன், பட்டவன் ஆகிய பரிவார தெய்வங்களும் உள்ளது. இக்கோவிலில் 3 ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் சுத்ததண்ணீர் போடும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து கரகம்பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி காலையில் கோவில் பூசாரிக்கு அருள் வந்து, ஆணிகள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறினார். தொடர்ந்து கோவில் வளாகத்தில் பக்தர்கள் வரிசையாக அமர்ந்து இருந்தனர். பின்னர் கோவில் பூசாரி பக்தர்களின் தலையில் வரிசையாக தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதில் தரகம்பட்டி, வெள்ளனூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை கரூர் மாவட்ட போலீசார் செய்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர்முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story