மாவட்டத்தில் 45,580 வழக்குகள் நிலுவையில் உள்ளன புதிய கோர்ட்டு திறப்பு விழாவில் முதன்மை நீதிபதி பேச்சு


மாவட்டத்தில் 45,580 வழக்குகள் நிலுவையில் உள்ளன புதிய கோர்ட்டு திறப்பு விழாவில் முதன்மை நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 14 Aug 2019 10:45 PM GMT (Updated: 14 Aug 2019 8:50 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் 45,580 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற புதிய கோர்ட்டு திறப்புவிழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி முரளிசங்கர் கூறினார்.

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில் புதிய ஒருங்கிணைந்த மாவட்ட உரிமையியல் மற்றும் ஜூடிசியல் கோர்ட்டு திறப்புவிழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி முரளிசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு, மாநகர போலீஸ் கமிஷனர் அ.அமல்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள், வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.

புதிய கோர்ட்டை திறந்து வைத்து மாவட்ட முதன்மை நீதிபதி முரளிசங்கர் பேசும்போது கூறியதாவது:-

இந்த புதிய கோர்ட்டில் ஸ்ரீரங்கம், பெட்டவாய்த்தலை, கொள்ளிடம் போலீஸ் நிலையங்கள் மற்றும் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட வழக்குகள் எடுத்துக்கொள்ளப்படும். மேலும் இந்த கோர்ட்டுக்கு திருச்சி ஜே.எம்.3., ஜே.எம்.4 கோர்ட்டுகளில் இருந்து 1,200 உரிமையியல் வழக்குகள் மற்றும் 800 குற்றவியல் வழக்குகள் மாற்றப்பட்டுள்ளன.

45,580 வழக்குள் நிலுவை

திருச்சி மாவட்ட அனைத்து கோர்ட்டுகளிலும் 45,580 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 29,510 உரிமையியல் வழக்குகளும், 16,070 குற்றவியல் வழக்குகளும் உள்ளன. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்கின்றனர். அதேநேரம் அவசரகதியில் வழங்கப்பட்ட நீதி புதைக்கப்பட்ட நீதிக்கு சமம். விரைவான நீதி வழங்க வேண்டும். அதே சமயத்தில் தரமான நீதி வழங்க வேண்டும். நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் வழக்குகளை விரைந்து முடிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த கோர்ட்டுக்கு சிவகாமசுந்தரி நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக மணப்பாறையில் பணியாற்றிவர். இந்த கோர்ட்டில் நேற்றே வழக்கு விசாரணையும் தொடங்கியது.

Next Story