சுயநலத்தை மறந்து பொதுநலத்தை மனதில் நிறுத்தினால் சுதந்திர இந்தியாவின் கனவை அடைய முடியும் நீதிபதி பேச்சு


சுயநலத்தை மறந்து பொதுநலத்தை மனதில் நிறுத்தினால் சுதந்திர இந்தியாவின் கனவை அடைய முடியும் நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 15 Aug 2019 10:45 PM GMT (Updated: 2019-08-16T01:57:59+05:30)

ஒவ்வொருவரும் சுய நலத்தை மறந்து பொது நலத்தை மனதில் நிறுத்தி செயல்பட்டால் சுதந்திர இந்தியாவின் கனவை அடைய முடியும் என கரூரில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் தெரிவித்தார்.

கரூர்,

கரூர் தாந்தோன்றிமலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று காலை சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதற்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் தலைமை தாங்கி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்களின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் பேசினார். அப்போது அவர் பேசுகையில், சுதந்திரம் எப்படி கிடைத்தது? அதன் மூலம் சாமானியனுக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு வழங்கப்படுவது உள்ளிட்டவை பற்றி சிந்தித்து பார்க்க வேண்டும். தன்னலம் கருதாமல், இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் பல்வேறு தலைவர்கள், தியாகிகளின் போராடியதாலேயே ஆங்கிலேயரின் அடிமை ஆட்சிமுறையிலிருந்து நாம் விடுவிக்கப்பட்டோம்.

எனவே இனி வரும் காலங் களில் பண்டிகைகளை போன்று, நாட்டின் வீதியெங்கும் சுதந்திரதின விழாவை மக்கள் கொண்டாட முன்வர வேண்டும். மாறாக அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், பள்ளிகளில் மட்டுமே கொண்டாடப்படும் தினமாக மாறிவிடக்கூடாது. சந்திரயான்-2 செயற்கைகோளை விண்ணில் செலுத்திவிட்டு கைத்தட்டி கொண்டிருக்கிற வேளையில், தூத்துக்குடியில் நோய்வாய்பட்டு இறந்த தாயை அடக்கம் செய்ய வழியில்லாமல் குப்பை தொட்டியில் அவரது உடலை மகன் வீசி சென்றது நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இதையெல்லாம் பார்க்கிறபோது உண்மையான சுதந்திரம் நாட்டிலுள்ள அனைவருக்கும் கிடைத்து விட்டதா? என எண்ண தோன்றுகிறது.

சமூக அக்கறை

இறையாண்மை மிக்க, சமத்துவ, மதசார்பற்ற, ஜனநாயக குடியரசை முன்னிலைப் படுத்தி தான் நம் அரசியலமைப்பு சட்டம் உள்ளது. எனவே ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகளை குறை சொல்வதால் மட்டும் பிரச்சினைகள் தீர்ந்து விடாது. சுதந்திர இந்தியாவின் கனவான சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்கி பொருளாதாரத்தில் சமமாக இருப்பது உள்ளிட்ட நோக்கத்தை நேர்மையுடன் நாம் செயல் படுத்த வேண்டும். எனவே நாம் சுயநலத்தை மறந்து பொதுநலத்தை மனதில் நிறுத்தினால் தான் சுதந்திர இந்தியாவின் கனவை அடைய முடியும். எனவே சமூகத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவரும் தங்களது குழந்தைகள், குடும்பத்தினரை சமூக அக்கறையுள்ளவர்களாக உருவாக்க வேண்டும். நேரு, பகத்சிங், சர்தார் வல்லபாய் பட்டேல், கக்கன், நல்லகண்ணு போன்ற தலைவர்களை தேட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. இதை மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மரக்கன்றுகள் வினியோகம்

தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்களின் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் உடல்உறுப்பு தானம் செய்த நீதிமன்ற ஊழியர்களுக்கு அதற்குரிய அடையாள அட்டையுடன், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில் தலைமை குற்றவியல் நடுவர் கோபிநாத், ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண்-1 நீதிபதி விஜய்கார்த்தி, குடும்பநல நீதிபதி பிருந்தாகேசவாச்சாரி, மகளிர் விரைவுநீதிமன்ற நீதிபதி சசிகலா, சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் மோகன்ராம் மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story